காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்


காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
x
தினத்தந்தி 1 Aug 2018 4:15 AM IST (Updated: 1 Aug 2018 12:07 AM IST)
t-max-icont-min-icon

காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மணற்பரப்பு வெளியில் தெரிகிறது.

திருச்சி,

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழையளவு குறைந்ததால் அங்குள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 34 ஆயிரம் கன அடி நீர் வந்தது. முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் உபரி நீர் 8 ஆயிரம் கன அடியும் திறந்து விடப்பட்டது.

இந்தநிலையில் மேட்டூர் அணையில் இருந்து நேற்று காலை நீர்வரத்து குறைந்ததால், முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றுக்கு உபரிநீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. காலை 7.15 மணி அளவில் கொள்ளிடம் மதகுகள் அடைக்கப்பட்டன. மேட்டூர் அணையில் இருந்து முக்கொம்பு மேலணைக்கு நேற்று மாலை நேரநிலவரப்படி வினாடிக்கு 17 ஆயிரத்து 573 கனஅடி தண்ணீர் வந்தது.மேலணையில் இருந்து காவிரி ஆற்றில் கல்லணைக்கு நேற்று மாலை நேர நிலவரப்படி வினாடிக்கு 16 ஆயிரத்து 673 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

உபரி தண்ணீர் திறப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டதால் கொள்ளிடம் ஆற்றில் மணற்பரப்பு வெளியில் தெரிய தொடங்கியது. புதர்செடிகள் முழுவதுமாக தெரிகிறது. கடந்த சில நாட்களாக இருபுறமும் கரைகளை தொட்டபடி ஓடிய தண்ணீர், தற்போது ஓடை போல ஓடுகிறது. மேலும் பள்ளத்தில் குளம் போல தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் ஆற்றில் இறங்கி சிலர் மீன்பிடிக்க தொடங்கிவிட்டனர். ஆங்காங்கே தூண்டில் போட்டும், வலைவீசியும் மீன் பிடிப்பதை காணமுடிந்தது.

காவிரியில் தண்ணீர் திறப்பு குறைந்திருந்தாலும் இருபுறமும் கரையை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. திருச்சி காவிரி பாலத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள், ஆற்றில் பாய்ந்தோடும் தண்ணீரை பார்த்து செல்கின்றனர். பாலத்தில் நின்று கொண்டு பலர் தங்களது செல்போன்களில் ‘செல்பி‘ எடுப்பதையும் காணமுடிந்தது.

கர்நாடக மாநிலத்தில் மழை அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் திறப்பின் அளவு குறைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காவிரி ஆற்றில் திறந்து விடும் அளவும் குறைந்துவிடும் என விவசாயிகள் கவலை அடைய தொடங்கி உள்ளனர். 

Next Story