காலாப்பட்டில் தொடர்ந்து பதற்றம்; காங்கிரஸ் பிரமுகரின் உடலை வாங்க மறுத்து திடீர் மறியல்


காலாப்பட்டில் தொடர்ந்து பதற்றம்; காங்கிரஸ் பிரமுகரின் உடலை வாங்க மறுத்து திடீர் மறியல்
x
தினத்தந்தி 31 July 2018 11:45 PM GMT (Updated: 31 July 2018 8:29 PM GMT)

புதுச்சேரியில் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்ட காங்கிரஸ் பிரமுகரின் உடலை வாங்க மறுத்து அவருடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்த பதற்றம் நீடிப்பதால் 2–வது நாளாக அங்கு கடைகள் அடைக்கப்பட்டன.

புதுச்சேரி,

புதுச்சேரி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ஜோசப் என்ற ரவி நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் சென்றபோது தமிழக பகுதியான ஆரோவில் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஆம்புலன்ஸ் வேன் மூலம் காலாப்பட்டு பகுதியில் உள்ள அவருடைய வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அந்த ஆம்புலன்ஸ் வேன் கிழக்கு கடற்கரை சாலையில் காலாப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது ஜோசப்பின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரண்டு வந்து வேனை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். ஜோசப்பை கொலை செய்த கொலையாளிகளை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் என்று கூறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பதற்றமும் பரபரப்பும் நிலவியது. அவர்களை அங்கு பாதுகாப்புக்காக இருந்த காலாப்பட்டு போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அதை அவர்கள் ஏற்க மறுத்தனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் ஒரு கட்டத்தில் போலீசாருக்கும், மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து புதுச்சேரி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேசினார். ‘‘இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள். இந்த வழக்கை தமிழக போலீசார்தான் விசாரித்து வருகிறார்கள். நிச்சயம் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள்’’ என்று அவர் உறுதி அளித்தார்.

இதை ஏற்று மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். அதன்பின் ஜோசப்பின் உடல் அவருடைய வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நேற்று காலை ஜோசப்பின் வீட்டுக்கு வந்து அவருடைய உடலுக்கு அமைச்சர் ஷாஜகான் மரியாதை செலுத்தினார். ஜோசப்பின் ஆதரவாளர்களும் ஏராளமானோர் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த படுகொலை சம்பவத்தால் காலாப்பட்டு பெரியகாலாப்பட்டு, பிள்ளைச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. நேற்று 2–வது நாளாக அந்த பகுதியில் கடைகள், மதுபான பார்கள், பெட்ரோல் பங்க்குகள் அடைக்கப்பட்டு இருந்தன. அந்த பகுதிகளுக்கு தனியார் பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

சென்னையில் இருந்து வந்த தமிழக அரசு பஸ்கள் பிள்ளைச்சாவடியில் இருந்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. அதேபோல் சென்னை சென்ற பஸ்களும் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.

புதுச்சேரி மாவட்ட கலெக்டர் சவுத்ரி அபிஜித் விஜயும் அங்கு வந்து பார்வையிட்டார். பெரிய காலாப்பட்டு பகுதியில் உள்ள நிலவரம் குறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தாவிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு மற்றும் பிள்ளைச்சாவடி பகுதிகளில் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஜோசப்பின் உடல் அடக்கம் நேற்று மாலை பெரிய காலாப்பட்டில் உள்ள இடுகாட்டில் நடைபெற்றது.


Next Story