வெவ்வேறு விபத்துகளில் பலியான 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.21½ லட்சம் நஷ்டஈடு


வெவ்வேறு விபத்துகளில் பலியான 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.21½ லட்சம் நஷ்டஈடு
x
தினத்தந்தி 1 Aug 2018 3:30 AM IST (Updated: 1 Aug 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே வெவ்வேறு விபத்துகளில் பலியான 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.21½ லட்சம் நஷ்டஈடு வழங்கும்படி வேலூர் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு கோர்ட்டு நீதிபதி வெற்றிச்செல்வி தீர்ப்பு வழங்கினார்.

வேலூர்,



அணைக்கட்டு தாலுகா ஒதியத்தூரை சேர்ந்தவர் விஜயகுமார், தொழிலாளி. இவருடைய மனைவி மணிமேகலை (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். விஜயகுமார் தனது மனைவி மணிமேகலையுடன் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ந் தேதி மோட்டார் சைக்கிளில் வேலூர் நோக்கி வந்தார்.

அணைக்கட்டை அடுத்த சாரதிப்பேட்டை அருகே வந்தபோது எதிரே வந்த பள்ளி வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி இருவரும் பலத்த காயமடைந்தனர். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிமேகலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விபத்தில் உயிரிழந்த மணிமேகலையின் குடும்பத்தினர் ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்கக்கோரி வேலூர் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி வெற்றிச்செல்வி விசாரித்து தீர்ப்பு கூறினார். விபத்தில் பலியான மணிமேகலையின் குடும்பத்துக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் இணைந்து ரூ.11 லட்சத்து 76 ஆயிரத்து 700 நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதே போன்று வேலூர் ராமசந்திரா நகரை சேர்ந்தவர் தாரா (45), தொழிலாளி. இவர் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந் தேதி மோட்டார் சைக்கிளில் பள்ளிகொண்டா-ஆம்பூர் சாலை மாதனூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தாரா பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விபத்தில் உயிரிழந்த தாராவின் குடும்பத்தினர் ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்கக்கோரி வேலூர் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி வெற்றிச்செல்வி விசாரித்து தீர்ப்பு கூறினார். விபத்தில் பலியான தாராவின் குடும்பத்துக்கு லாரி உரிமையாளர் மற்றும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் இணைந்து ரூ.9 லட்சத்து 72 ஆயிரத்து 300 நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இரு விபத்து வழக்குகளில் பலியான 2 பேரின் குடும்பத்துக்கு மொத்தம் ரூ.21 லட்சத்து 49 ஆயிரம் நஷ்டஈடு வழங்கும்படி நீதிபதி தீர்ப்பு கூறினார். 

Next Story