மோகனூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா நாளை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்


மோகனூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா நாளை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 1 Aug 2018 4:15 AM IST (Updated: 1 Aug 2018 3:29 AM IST)
t-max-icont-min-icon

மோகனூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா நாளை (வியாழக்கிழமை) முதல் செயல்பட உள்ளது. இதை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், சேந்தமங்கலம், குமாரபாளையம் மற்றும் கொல்லிமலை என 7 தாலுகா அலுவலகங்கள் உள்ளன. இந்த நிலையில் நாமக்கல், சேந்தமங்கலம் மற்றும் பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள சில பகுதிகளை இணைத்து மோகனூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோதே சட்டசபையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

இதற்கிடையே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு நாமக்கல் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மோகனூரை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். தற்போது மோகனூர் தனி தாலுகாவாக செயல்பட அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும் மோகனூர் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.வினர் நேற்று பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் மோகனூர் ஒன்றிய செயலாளர் கருமண்ணன், நகர துணை செயலாளர் சிவஞானம், முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் புரட்சி பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாளை (வியாழக்கிழமை) முதல் மோகனூரில் உள்ள சமுதாய கூடத்தில் தாலுகா அலுவலகம் செயல்பட உள்ளது. இந்த தாலுகா அலுவலகத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார்.

புதிதாக செயல்பட உள்ள மோகனூர் தாலுகாவில் வளையப்பட்டி, மோகனூர், மேட்டுப்பட்டி, பாலப்பட்டி என 4 குறுவட்டங்கள் உருவாக்கப்பட்டு, 31 வருவாய் கிராமங்கள் இணைக்கப்பட்டு உள்ளன. வளையப்பட்டி குறுவட்டத்தில் வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர், ஆண்டாபுரம், ஆண்டாபுரம் அக்ரஹாரம், பரளி, தோளூர், அணியாபுரம், சின்னபெத்தாம்பட்டி, லத்துவாடி வருவாய் கிராமங்களும், மோகனூர் குறுவட்டத்தில் அரசநத்தம், ஆரியூர், பேட்டப்பாளையம், மோகனூர், ராசிபாளையம், ஒருவந்தூர், குமரிபாளையம் வருவாய் கிராமங்களும் அடங்கி உள்ளன.

இதேபோல் மேட்டுப்பட்டி குறுவட்டத்தில் உள்ள எம்.மேட்டுப்பட்டி, அ.மேட்டுப்பட்டி, செவந்திப்பட்டி, வடவத்தூர், அக்ரஹார வாழவந்தி, திப்ரமாதேவி, திப்ரமாதேவி அக்ரஹாரம் ஆகிய வருவாய் கிராமங்களும், பாலப்பட்டி குறுவட்டத்தில் உள்ள நன்செய் இடையாறு, இடுப்பன்குளம், பூஞ்சை இடையாறு கீழ்முகம், காளிபாளையம், செங்கப்பள்ளி, கொமாரபாளையம், சர்க்கார் வாழவந்தி, குட்லாம்பாறை, கே.புளியம்பட்டி, மாடகாசம்பட்டி, பெரமாண்டம்பாளையம், மணப்பள்ளி வருவாய் கிராமங்களும் இடம்பெற்று உள்ளன.

மோகனூரை புதிய தாலுகாவாக அறிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் ஆகியோர் நன்றி தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையே தாலுகா அலுவலகம் செயல்பட உள்ள இடத்தை நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, சப்-கலெக்டர் கிராந்திகுமார், கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ., நாமக்கல் தாசில்தார் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேன்மொழி, விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் நேற்று நேரில் பார்வையிட்டனர். மோகனூர் தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் தாலுகாக்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் இந்த மாவட்டத்தில் புதிதாக 4 தாலுகாக்கள் உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story