அலுவலக உதவியாளர்கள் பணி நியமனத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
அலுவலக உதவியாளர்கள் பணி நியமனத்தை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரை,
காரைக்குடியைச் சேர்ந்த கணேசன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மண்டல இணை இயக்குனர் அலுவலகம், கோ.புதூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ., ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அரசு ஐ.டி.ஐ. ஆகியவற்றில் காலியாக இருந்த அலுவலக உதவியாளர் பணியிடங்கள் கடந்த 2015–ம் ஆண்டு நிரப்பப்பட்டன. இந்த பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக முறையான விளம்பரம் வெளியிடப்படவில்லை. விதிகள் பின்பற்றப்படவில்லை. முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே மேற்கண்ட அலுவலக உதவியாளர் பணியிடங்களை முறைகேடாக நிரப்பிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இணை இயக்குனர் ராஜசேகர் சார்பில் வக்கீல் என்.இளங்கோ ஆஜராகி, “மனுதாரர் இந்த வழக்கை உள்நோக்கத்துடன் தாக்கல் செய்துள்ளார். அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. வேலைவாய்ப்பு பயிற்சி அலுவலகத்தில் காலியாக இருந்த அலுவலக உதவியாளர் பணியிடங்கள் அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் நிரப்பப்பட்டுள்ளன. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்“ என்று வாதாடினார்.
விசாரணை முடிவில், “மனுதாரரின் இந்த மனுவை பொதுநல வழக்காக எடுத்துக்கொள்ள முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது“ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.