காங்கிரஸ் துணைத்தலைவர் கொலை வழக்கில் கூலிப்படையினரை கைது செய்ய போலீசார் தீவிரம்


காங்கிரஸ் துணைத்தலைவர் கொலை வழக்கில் கூலிப்படையினரை கைது செய்ய போலீசார் தீவிரம்
x
தினத்தந்தி 3 Aug 2018 3:56 AM IST (Updated: 3 Aug 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் காங்கிரஸ் துணைத்தலைவரை கொலை செய்த கூலிப்படையினரை அடையாளம் கண்டு கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

வானூர்,

புதுவை மாநிலம் பெரிய காலாப்பட்டை சேர்ந்தவர் ஜோசப் (வயது 42). புதுச்சேரி வடக்கு மாவட்ட துணைத்தலைவராக இருந்து வந்தார். காலாப்பட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் பல்வேறு ஒப்பந்த பணிகளை செய்து வந்தார். கடந்த 30-ந்தேதி மதியம் ஜோசப் தனது வீட்டில் இருந்து சென்றபோது ஆரோவில் தனியார் நர்சரி கார்டன் அருகே அவரை பின்னால் 2 மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்து வந்த 4 பேர் வெட்டிக்கொலை செய்தனர்.

புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையைத் தொடர்ந்து பெரிய காலாப்பட்டை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்களான சந்திரசேகர், பார்த்திபன், என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் குமரேசன், செல்வகுமார் மற்றும் ஆனந்த், மோகன் ஆகியோரை கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

கைதானவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியபோது, “தொழில் போட்டி காரணமாக ஜோசப்பை புதுச்சேரியை சேர்ந்த கூலிப்படைக்கு ரூ.50 லட்சம் கொடுத்து கொலை செய்தோம்” என்று அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். அதனையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் ஜோசப் கொலை செய்யப்பட்ட இடமான ஆரோவில் தனியார் நர்சரி கார்டன் பகுதியில் கோட்டக்குப்பம் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜோசப் செல்வராஜ், மைக்கேல் இருதயராஜ், திருமணி, எழிலரசி மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது நர்சரி கார்டன் நுழைவு வாயிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் கொலை நடத்த நேரத்தில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில் கடந்த 30-ந்தேதி மதியம் 1 மணிக்கு 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் ஹெல்மெட் அணிந்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

சிறிது நேரம் கழித்து மதியம் 1.12 மணிக்கு கார்டன் பகுதியை மீண்டும் 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் ஹெல்மெட் அணிந்து திரும்பிச் சென்ற காட்சியும் பதிவாகி இருந்தது. அதனால் அவர்கள் தான் ஜோசப்பை கொலை செய்த கூலிப்படையைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதைத் தொடர்ந்து அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள்களின் பதிவு எண்களை வைத்து கூலிப்படையினரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Next Story