சிறப்பு இடஒதுக்கீட்டின்கீழ் மருத்துவக்கல்வி வழங்க மறுக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு மத்திய–மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


சிறப்பு இடஒதுக்கீட்டின்கீழ் மருத்துவக்கல்வி வழங்க மறுக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு மத்திய–மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 Aug 2018 3:45 AM IST (Updated: 4 Aug 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு இடஒதுக்கீட்டின்கீழ் மருத்துவக்கல்வி வழங்க மறுக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மத்திய–மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சொக்கபடப்பை கிராமத்தை சேர்ந்த குறலரசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

எனது தந்தை இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தற்போது நான் பிளஸ்–2 முடித்துவிட்டு எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் தேர்வு எழுதினேன். அதில் 720–க்கு 265 மதிப்பெண் பெற்றேன்.

முன்னாள் ராணுவத்தினர், போரில் உயிரிழந்தவர்கள், ராணுவத்தில் பணியில் உள்ளவர்களின் பிள்ளைகளுக்கான சிறப்பு இடஒதுக்கீட்டின்கீழ் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்தேன். ஆனால் அழைப்பு வரவில்லை. இதுகுறித்து கேட்டபோது, ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கான சிறப்பு இடஒதுக்கீட்டின்படி மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதியில்லை என்று கடந்த ஜூன் 1–ந்தேதி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ராணுவத்தில் பணியாற்றுபவர்களின் பிள்ளைகளுக்கு சிறப்பு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் இந்த சலுகை மறுக்கப்படுகிறது. இது சட்டவிரோதம்.

எனவே ராணுவத்தில் பணியாற்றுபவர்களின் பிள்ளைகளை மருத்துவக் கல்வியில் சிறப்பு இடஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், இது குறித்து மத்திய பாதுகாப்பு துறை இணை செயலாளர், தமிழக அரசின் தலைமை செயலாளர், தமிழக சுகாதார மற்றும் குடும்பநலத்துறை முதன்மை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கை வருகிற 31–ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story