டிராவல்ஸ் ஏஜென்சி அலுவலகத்தில் வைத்து பனியன் நிறுவன மேலாளர் மீது தாக்குதல்; பஸ் முன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு


டிராவல்ஸ் ஏஜென்சி அலுவலகத்தில் வைத்து பனியன் நிறுவன மேலாளர் மீது தாக்குதல்; பஸ் முன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Aug 2018 5:15 AM IST (Updated: 4 Aug 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

டிராவல்ஸ் ஏஜென்சி அலுவலகத்தில் வைத்து பனியன் நிறுவன மேலாளர் மீது தாக்குதல் பஸ் முன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர்,

திருப்பூர் பாளையக்காடு பகுதியை சேர்ந்தவர் வள்ளி கணேசன் (வயது 31). பனியன் நிறுவன மேலாளர். இவரது மனைவி ரேஷ்மா. இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் வள்ளி கணேசன் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, குடும்பத்துடன் சென்னை செல்வதற்காக திருப்பூர் புஷ்பா சந்திப்பு அருகே அவினாசி சாலையில் உள்ள தனியார் டிராவல்ஸ் டிக்கெட் புக்கிங் அலுவலகத்திற்கு டிக்கெட் எடுப்பதற்காக நேற்று இரவு சென்றார்.

அப்போது குழந்தைகளும் உடன் அழைத்து சென்றிருந்தார். அலுவலகத்தில் அவரது குழந்தைகள் சாக்லெட்டுகளை சாப்பிட்டு விட்டு அங்கும் இங்குமாக போட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக அலுவலகத்தில் இருந்தவர்களுக்கும், வள்ளி கணேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்தவர்கள் வள்ளி கணேசனை தாக்கினர். இதில் அவர் காயமடைந்தார். உடனே தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை செல்ல இருந்த தனியார் பஸ் முன் அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டிய பயணிகளும் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது தொடர்பாக வள்ளி கணேசன் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் தன்னை தாக்கிய டிக்கெட் புக்கிங் அலுவலக மேலாளர் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story