இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.20 லட்சம் கஞ்சா பறிமுதல் ஊர்க்காவல் படை வீரர் உள்பட 3 பேர் கைது


இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.20 லட்சம் கஞ்சா பறிமுதல் ஊர்க்காவல் படை வீரர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 5 Aug 2018 4:30 AM IST (Updated: 4 Aug 2018 10:35 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவையும், படகையும் கடலோர காவல் படை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஊர்க்காவல் படை வீரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேதாரண்யம்,


நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த பெரியகுத்தகை பகுதியில் இருந்து கஞ்சா கடத்தப்படுவதாக வேதாரண்யம் கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து வேதாரண்யம் கடலோர காவல் படை போலீஸ் துணை சூப்பிரண்டு கலிதீர்த்தான், இன்ஸ்பெக்டர்கள் மும்தாஜ் பேகம், முருகவேலு மற்றும் போலீசார் பெரியகுத்தகை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு சரக்கு வேன் வந்தது. அந்த வேனை மறித்து போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது வேனில் இருந்த 6 மூட்டைகளில் கஞ்சா பண்டல்கள் இருந்தது தெரிய வந்தது. இதன் எடை 192 கிலோ ஆகும். இதன் மதிப்பு ரூ.20 லட்சம்.

இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வேனை ஓட்டி வந்தவர் வானவன்மகாதேவியை சேர்ந்த ரமேஷ்குமார்(வயது 30) என்று தெரிய வந்தது. அந்த கஞ்சா மூட்டைகளை பெரிய குந்தகையை சேர்ந்த முனீஷ் என்ற முனீஸ்வரன் காரில் கொண்டு வந்து பின்னர் சரக்கு வேனில் ஏற்றி கடற்கரைக்கு கொண்டு செல்லுமாறு கூறியதாக ரமேஷ்குமார் தெரிவித்தார்.


இதனையடுத்து போலீசார், கஞ்சா கடத்தல் கும்பலை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி ரமேஷ்குமாரை அவரது செல்போனிலேயே கடத்தல் கும்பலிடம் பேச வைத்தனர். அவரும், போலீசார் கூறியபடி போனில் பேசி இன்னும் சிறிது நேரத்தில் கடற்கரைக்கு வந்து விடுவேன் என்று கூறினார்.

பின்னர் போலீசார், ரமேஷ்குமாரை வேனை ஓட்டிச்செல்லுமாறு கூறி விட்டு அந்த வேனை பின்தொடர்ந்து சென்றனர். கடற்கரையில் முனீஸ்வரன் மற்றும் இலங்கை யாழ்ப்பாணம் மருந்தகேணி பகுதியை சேர்ந்த சக்திவேல்(44), யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுகுமார்(28), பெரியகுத்தகை சர்வோதயபுரத்தை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் மகேந்திரன்(32) ஆகியோர் தயாராக காத்திருப்பதை போலீசார் பார்த்தனர்.


உடனே போலீசார் அந்த சரக்கு வாகனத்தை அனுப்பி விட்டு அந்த பகுதியில் மறைந்து நின்றனர். வேன் அருகில் சென்றதும் சக்திவேல், சுகுமார், மகேந்திரன் ஆகிய 3 பேரும் வேனில் இருந்த கஞ்சா மூட்டைகளை படகில் ஏற்றுவதற்காக வேனின் அருகில் வந்தனர். அப்போது அங்கு மறைந்து இருந்த போலீசார் அவர்கள் மூன்று பேரையும் சுற்றி வளைத்தனர்.

இவர்களில் முனீஸ்வரன், சுகுமார் ஆகிய இருவரும் தப்பியோடி விட்டனர். மகேந்திரன், சக்திவேல் ஆகிய இருவரும் போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து போலீசார் வேன் டிரைவர் ரமேஷ்குமார், மகேந்திரன், சக்திவேல் ஆகிய 3 பேரையும் கைது செய்து வேதாரண்யம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மேலும் 192 கிலோ கஞ்சாவையும், கஞ்சாவை கடத்திச் செல்வதற்காக வைத்திருந்த படகு, எஞ்சின் மற்றும் கஞ்சா கடத்தி வந்த வேன் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய முனீஸ்வரன், சுகுமார் ஆகிய இருவரையும் தேடி வருகிறார்கள்.

கஞ்சா கடத்த முயன்ற சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், வேதாரண்யம் போலீஸ் நிலையத்திற்கு வந்து கைதானவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் என்ஜின் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.

இந்த கடத்தல் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story