ரகசிய அறையில் பதுக்கி வைத்து விற்பனை 59 கிலோ புகையிலை பொருட்கள் சிக்கியது


ரகசிய அறையில் பதுக்கி வைத்து விற்பனை 59 கிலோ புகையிலை பொருட்கள் சிக்கியது
x
தினத்தந்தி 4 Aug 2018 11:00 PM GMT (Updated: 4 Aug 2018 6:47 PM GMT)

ரகசிய அறையில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 59 கிலோ புகையிலை பொருட்கள் சிக்கியது. இதையடுத்து மளிகை கடை, குடோனுக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

சூரமங்கலம்,

சேலம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகே ரங்கா நகர் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் நேற்று அந்த கடைக்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கடையில் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் ஒருவர் நுழையும் அளவிற்கு ரகசிய அறை ஒன்று இருந்தது. மேலும் அந்த அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்கள் சிக்கியது. பெங்களூருவில் இருந்து வாங்கி வரப் படும் இந்த புகையிலை பொருட்களை அவர்கள் சில்லரை கடைகளுக்கு விற்று வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து மளிகை கடை மற்றும் குடோனுக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் அந்த கடையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மொத்தம் இந்த கடையில் ரூ.87 ஆயிரத்து 470 மதிப்புள்ள 59 கிலோ புகையிலை பொருட்கள் சிக்கியது.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் கூறும்போது, ‘புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த கடையில் சோதனை செய்யப்பட்டது. இதில் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதுடன், ரகசிய அறையில் அவற்றை பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். 

Next Story