வாட்ஸ் அப் மூலம் விசுவ இந்து பரிஷத் அமைப்பு குறித்து அவதூறு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
நீலகிரி மாவட்டத்தில் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் ஊட்டி நகர மேற்கு போலீஸ் நிலையத்திலும் புகார் மனு அளித்தனர்.
ஊட்டி,
விசுவ இந்து பரிஷத் நீலகிரி மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:–
ஊட்டி வியாபாரிகள் சங்க வாட்ஸ் அப் குரூப்புக்கு கடந்த 2–ந் தேதி குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில், வீட்டில் உள்ளவர்களிடம் யாராவது இலவசமாக ரத்த பரிசோதனை செய்கிறோம், சர்க்கரை நோயை கண்டறிகிறோம் என்றும் ரத்த மாதிரியை எடுக்க மருத்துவக்கல்லூரிகளில் இருந்து வருகிறோம் என்றும் தெரிவித்தால், அவர்களை வீட்டில் அனுமதிக்காதீர்கள். ரத்த மாதிரி எடுத்தால் எச்.ஐ.வி. வைரஸ் பரவுகிறது. ஒரு அமைப்பினர் இதுபோன்ற தீவிரவாத பணியில் ஈடுபடுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த குறுஞ்செய்தி மக்களுக்கு சேவை செய்யும் விசுவ இந்து பரிஷத் மற்றும் சில அமைப்புகள் மீது அவதூறு பரப்பி வருகிறது. இதனை வாட்ஸ் அப்பில் பரப்பிய நபரின் செல்போன் எண் விவரம் புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, அந்த நபர் மீதும், இதுபோன்ற தவறான தகவலை பரப்புகிறவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள், ஊட்டி நகர மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் மனுவை கொடுக்கும் படி தெரிவித்தனர். அதன்படி விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் ஊட்டி நகர மேற்கு போலீஸ் நிலையத்திலும் புகார் மனு அளித்தனர்.