ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் 28-வது நாளாக குளிக்க தடையால் ஏமாற்றம்


ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் 28-வது நாளாக குளிக்க தடையால் ஏமாற்றம்
x
தினத்தந்தி 6 Aug 2018 4:30 AM IST (Updated: 6 Aug 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

ஒகேனக்கல்லில் சுற்றலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். தொடர்ந்து 28-வது நாளாக குளிக்க தடை விதித்துள்ளதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் அதிக அளவில் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனிடையே கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் தற்போது ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து நேற்று படிப்படியாக குறையத்தொடங்கியது. அதன்படி வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின்அருவி, சினிபால்சில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் தொடர்ந்து 28-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் காவிரி கரையோரத்தில் பாதுகாப்பான இடங்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

நேற்றும் தொடர்ந்து பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையொட்டி சுற்றுலா பயணிகள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை(லைப்ஜாக்கெட்) அணிந்து பரிசல்களில் உற்சாகமாக சவாரி செய்து காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். தற்போது கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து மணல் திட்டு வரை பரிசல்கள் இயக்கப்படுகிறது. இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றம் அடைந்தோம். நடைபாதைக்கு கீழ் தான் தண்ணீர் செல்கிறது. இதனால் தொங்குபாலத்திற்கு சென்று பார்வையிட அனுமதிக்க வேண்டும். மேலும் மெயின் அருவி, சினிபால்சில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, மெயின் அருவி, சினிபால்சில் அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகள் வெள்ளப்பெருக்கால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. அங்கு மீண்டும் தடுப்பு கம்பிகள் அமைத்த பின்னரே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றனர். 
1 More update

Next Story