டிக்கெட் பரிசோதகர் எனக்கூறி ரெயிலில் பயணம் செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது


டிக்கெட் பரிசோதகர் எனக்கூறி ரெயிலில் பயணம் செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது
x
தினத்தந்தி 7 Aug 2018 4:30 AM IST (Updated: 7 Aug 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

டிக்கெட் பரிசோதகர் எனக்கூறி ரெயிலில் பயணம் செய்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

தூத்துக்குடியில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டு இருந்தது. அந்த ரெயில் திண்டுக்கல் அருகே சென்றபோது, எஸ்-5 பெட்டியில் ஒரு வாலிபர் நின்று கொண்டே பயணம் செய்தார். அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகரிடம், அந்த வாலிபர் தானும் டிக்கெட் பரிசோதகர் தான் என்றும், தனக்கு ஒரு இருக்கையை ஒதுக்கி தரும்படி கேட்டுள்ளார். ஆனால், அவரிடம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் தான் இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த டிக்கெட் பரிசோதகர், அவரிடம் உங்கள் அடையாள அட்டையை காட்டுங்கள் என்று கேட்டார். உடனே அந்த வாலிபர் அடையாள அட்டையை காட்டினார்.

அதை வாங்கி பார்த்தபோது, அது மற்றொரு டிக்கெட் பரிசோதகரின் அடையாள அட்டை என்பது தெரியவந்தது. இது பற்றி கேட்டபோது, அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அந்த ரெயில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்ததும், இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர், சென்னை சூளைமேட்டை சேர்ந்த ரமேஷ்(வயது 27) என்பதும், தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை நிமித்தமாக தூத்துக்குடிக்கு சென்றபோது, அங்கு கழிவறை அருகே கிடந்த டிக்கெட் பரிசோதகர் ஒருவரின் அடையாள அட்டையை எடுத்து வைத்து கொண்டதாகவும் கூறினார். இதனால் டிக்கெட் பரிசோதகர் என்று கூறி ரெயிலில் பயணம் செய்த ரமேஷ் மீது ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். 

Next Story