மாவட்ட செய்திகள்

விஜயமங்கலத்தில் செயல்படும் 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் பா.ஜ.க. மனு + "||" + Remove 2 tasmak Shops District Revenue Officer to BJP Petition

விஜயமங்கலத்தில் செயல்படும் 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் பா.ஜ.க. மனு

விஜயமங்கலத்தில் செயல்படும் 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் பா.ஜ.க. மனு
விஜயமங்கலத்தில் செயல்படும் 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின்போது மாவட்ட வருவாய் அதிகாரியிடம் பா.ஜ.க.வினர் மனு கொடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

சத்தியமங்கலம் அருகே உள்ள டி.ஜி.புதூர் காளியூர் கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ரேவதி தலைமையில் 20–க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–

எங்கள் கிராமத்தில் கடந்த 2003–ம் ஆண்டு சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. இந்த நலக்கூடத்தில் நாங்கள் சுபகாரியங்கள் மற்றும் விசே‌ஷங்கள் நடத்தி வந்தோம். கடந்த ஒரு ஆண்டாக இந்த நலக்கூடம் எந்தவித பராமரிப்புமின்றி காணப்படுவதால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் சிலர் இந்த நலக்கூடத்தை மது அருந்துவதற்காக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே எங்கள் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

ஈரோடு கோணவாய்க்கால், கொல்லம்பாளையம், வெண்டிபாளையம், ஜி.எஸ்.காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த 50–க்கும் மேற்பட்டோர் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:–

நாங்கள் 137 குடும்பத்தினர் ரெயில்வே ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருந்து வருகிறோம். அதனால் மாற்று இடம் கேட்டு நாங்கள் விண்ணப்பித்து இருந்தோம். அதன் பேரில் 50 பேருக்கு அவல்பூந்துறை பகுதியிலும், 50 பேருக்கு மொடக்குறிச்சி பகுதியில் இலவச வீட்டு மணை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இன்னமும் இடம் அளவீடு செய்து கொடுக்கப்படவில்லை. எனவே மீதமுள்ள 37 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாவும், ஏற்கனவே இடம் கொடுக்கப்பட்டவர்களுக்கு இடத்தை அளவீடு செய்தும் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் வீரகோபால் கொடுத்திருந்த மனவில், ‘நான் கடந்த மாதம் 24–ந்தேதி சிவகிரி அருகே உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தேன். அப்போது அந்த பகுதியில் பேக்கரி வைத்துள்ள ஒருவர் என்னை தடுத்து நிறுத்தி தகார வார்த்தைகளால் திட்டியதோடு, எனக்கு கொலை மிரட்டலும் விடுத்தார்.

எனவே நான் இதுபற்றி சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். ஆனால் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனக்கு கொலை மிரட்டில் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

பாரதீய ஜனதா கட்சியின் பெருந்துறை ஒன்றிய தலைவர் சசிதயாள் தலைமையில் கட்சியினர் கொடுத்திருந்த மனுவில், ‘பெருந்துறை விஜயமங்கலம் பஸ் நிறுத்தம் அருகில் ஈஸ்வரன் கோவில் மற்றும் பெருமாள் கோவில் உள்ளன. இந்த கோவில்களின் அருகில் கடந்த மாதம் 2 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.

இந்த கடையில் மது அருந்தும் குடிமகன்கள் தகாத வார்த்தைகள் பேசியபடி, அந்த வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபடுகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட 2 டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மொத்தம் 201 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி, அதை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் விரும்பக்கொடை நிதியில் இருந்து ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்த ஒருவருக்கு மருத்துவ உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம் பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது. கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பிரபாவதி மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.