தனியார் நிதி நிறுவனம் ரூ.6½ லட்சம் மோசடி - கலெக்டரிடம் புகார்


தனியார் நிதி நிறுவனம் ரூ.6½ லட்சம் மோசடி - கலெக்டரிடம் புகார்
x
தினத்தந்தி 7 Aug 2018 12:05 AM GMT (Updated: 7 Aug 2018 12:05 AM GMT)

சேலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனம் மீது ரூ.6½ லட்சம் மோசடி புகார் தெரிவித்து தம்பதியினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

சேலம்,     

சேலம் கன்னங்குறிச்சி ராமநாதபுரம் 2-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். மாற்றுத்திறனாளி. இவரது மனைவி லட்சுமி. இவர்கள் இருவரும் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர், அவர்கள் கலெக்டர் ரோகிணியை சந்தித்து ஒரு மனுவை அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

சேலம் புதிய பஸ்நிலையம் அருகே இயங்கி வந்த வின்ஸ்டார் நிதி நிறுவனத்தில் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறியதை அடுத்து வீராணத்தில் எங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்று 3 தவணையாக ரூ.6½ லட்சம் கட்டினோம். ஆனால் குறிப்பிட்ட காலம் முடிவடைந்தவுடன், உங்களுக்கான பணம் இரட்டிப்பு ஆகிவிட்டது என்று கூறி ரூ.12 லட்சத்துக்கான காசோலையை கொடுத்தனர். இதையடுத்து பணம் எடுப்பதற்காக அவர்கள் கொடுத்த காசோலையை வங்கியில் கொடுத்தோம். ஆனால் பணம் இல்லாமல் காசோலை திரும்பியதால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பது தெரியவந்தது.

இந்த மோசடி தொடர்பாக சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்துள்ளோம். ஆனால் இதுவரை எங்களது பணம் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து வருகிறோம். எனவே, நிதி நிறுவனத்தில் நாங்கள் முதலீடு செய்த ரூ.6½ லட்சத்தை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராதாகிருஷ்ணன்-லட்சுமி கூறுகையில், பணம் இரட்டிப்பு ஆகும் என்ற நம்பிக்கையில் எங்களது மகனுக்கு தெரியாமல் ரூ.6½ லட்சத்தை நிதி நிறுவனத்தில் கட்டினோம். ஆனால் அதை தெரிந்து கொண்ட எங்களுடைய மகன், எங்களை வீட்டை விட்டு வெளியே விரட்டி விட்டான். தற்போது இருவரும் எங்கு செல்வது என்று தெரியவில்லை. கட்டிய பணத்தை திரும்ப பெற்றுத்தருமாறு போலீசாரிடம் பலமுறை தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுக்கு பணம் கிடைக்கவில்லை என்றால் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வோம், என்றனர்.

Next Story