மாவட்ட செய்திகள்

புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி சுற்றுலா வாகன டிரைவர்கள் வேலைநிறுத்தம் + "||" + Travel vehicle drivers strike in Nilgiris

புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி சுற்றுலா வாகன டிரைவர்கள் வேலைநிறுத்தம்

புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி சுற்றுலா வாகன டிரைவர்கள் வேலைநிறுத்தம்
புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா வாகன டிரைவர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி,

மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை கொண்டு வர உள்ளது. இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சுங்க வரி கட்டணத்தை குறைக்க வேண்டும். வாகன காப்பீடு தொகையை பல மடங்கு உயர்த்தி உள்ள மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் தனியார் வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா வாகன டிரைவர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊட்டி காபிஹவுஸ், ஏ.டி.சி., சேரிங்கிராஸ் அருகே என்.சி.எம்.எஸ்.க்கு செல்லும் சாலை, மத்திய கூட்டுறவு வங்கி பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் சுற்றுலா வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அந்த வாகனங்களில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் குறித்த நோட்டீசுகள் ஒட்டப்பட்டு இருந்தது.

ஊட்டி, குன்னூர், பைக்காரா உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு அழைத்து செல்லும் சுற்றுலா வேன்கள், கார்கள், டாக்சிகள் இயக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் அரசு பஸ்களிலும், ஆட்டோக்களிலும் சுற்றுலா தலங்களுக்கு சென்றனர். இதுகுறித்து நீலகிரி மாவட்ட சுற்றுலா வாகன சங்க நிர்வாகிகள் அமல்ராஜ், கோவர்த்தன் ஆகியோர் கூறியதாவது:– நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று (நேற்று) 900 சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படவில்லை. ஊட்டிக்கு வருகை தந்த கர்நாடகம் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை மத்திய அரசு செய்துள்ளது. இந்த புதிய சட்ட விதிகள் அமலுக்கு வந்தால் மோட்டார் வாகன தொழில் செய்வோர் பாதிக்கப்படுவார்கள். மேலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்க வாய்ப்பு ஏற்படும். இதனால் வாகன உரிமையாளர்கள், டிரைவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவே மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஆட்டோக்களின் நகரம் என அழைக்கப்படும் கூடலூர் நகரில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நேற்று இயக்கப்படவில்லை. இதேபோல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜீப்கள், சுற்றுலா கார்கள் இயங்கவில்லை. இதனால் வாகன நிறுத்தும் இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. கேரளா– கர்நாடகா மற்றும் தமிழகம் என 3 மாநிலங்கள் இணையும் கூடலூர் நகரில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக காணப்படும். ஆனால் வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக கூடலூர் நகர சாலைகள் வெறிச்சோடி கிடந்தது. மேலும் வழக்கம் போல் அரசு பஸ்கள், லாரிகள் இயங்கின.

தனியார் வாகனங்கள் எதுவும் இயக்கப்படாததால் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் மாணவ–மாணவிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. இதேபோல் பந்தலூர் தாலுகா பகுதியிலும் ஆட்டோக்கள், ஜீப்கள், சுற்றுலா கார்கள் இயக்கப்படவில்லை. மேலும் மக்கள் நடமாட்டமும் குறைவாகவே இருந்தது.

கோத்தகிரி மார்க்கெட் திடலில் வாடகை வாகன டிரைவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோத்தகிரி தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு லாரி டிரைவர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் ஜாகீர் உசேன், நீலமலை அனைத்து தொழிலாளர் சங்க வாகன பிரிவு செயலாளர் பாலன், சுற்றுலா வாகன டிரைவர் சங்க தலைவர் கணேசன், ஆட்டோ டிரைவர் சங்க தலைவர் செல்வம், இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் சங்க தலைவர் கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும். 3–ம் நபர் காப்பீடு, டீசல், சுங்கச்சாவடி கட்டணங்களை குறைக்க வேண்டும். வெளிமாநிலங்களில் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் வாடகை வாகன டிரைவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரும் செலவை அரசு ஏற்பதுடன், உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பத்திற்கு அரசு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும். டிரைவர் உரிமத்தை ரத்து செய்வதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த அனைத்து வாடகை வாகன டிரைவர்கள் சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி சுற்றுலா வாகன டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ஊட்டி படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. தொட்டபெட்டா மலைசிகரத்துக்கு சில சுற்றுலா பயணிகள் ஊட்டியில் இருந்து ஆட்டோக்களில் சென்றதை காண முடிந்தது. இருந்தபோதிலும் தொட்டபெட்டா மலைசிகரம் சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி இருந்தது. மேலும் கிராமப்புறங்களில் இருந்து ஊட்டிக்கு வரும் ஜீப்கள் ஓடவில்லை. அதன் காரணமாக கிராம பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் பொதுமக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. சுற்றுலா வாகனங்கள் இயங்காததால் பெரும்பாலான ஓட்டல்களில் கூட்டம் குறைவாக காணப்பட்டது.