காங்கேயம் அருகே சொத்து தகராறில் விவசாயியை வெட்டிக்கொன்ற அண்ணன் கைது
காங்கேயம் அருகே சொத்து தகராறில் விவசாயியை வெட்டிக்கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
காங்கேயம்,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஊதியூர் நாகரசுநல்லூர் கிராமம் கொண்டையன் தோட்டத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 75). இவருடைய மனைவி வள்ளியாத்தாள் (70). இவர்களுடைய மகன்கள் குப்புசாமி என்கிற ஈஸ்வரன் (50) மற்றும் சுந்தரவடிவேல் (45). விவசாயிகள். இவர்கள் 2 பேருக்கும் திருமணமாகவில்லை. இருவரும் குடிபழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்று கூறப்படுகிறது. பழனிசாமிக்கு 20 ஏக்கர் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் 2 வீடுகள் அருகருகே கட்டுப்பட்டுள்ளன. இதில் ஒரு வீட்டில் பெற்றோருடன் சுந்தரவடிவேல் குடியிருந்து வந்தார். மற்றொரு வீட்டில் குப்புசாமி என்கிற ஈஸ்வரன் குடியிருந்து வருகிறார்.
இந்த நிலையில் சொத்தை பிரித்து தரக்கோரி அண்ணன்–தம்பி இருவரும் பெற்றோருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். தோட்டத்தை சாகுபடி செய்வதில் அண்ணன், தம்பிகளுக்குள் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதற்கிடையில் நான் இறந்தபிறகுதான் சொத்தை பிரித்து கொள்ள முடியும் என்று பழனிசாமி கூறிவிட்டார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனிசாமியை மூத்த மகன் குப்புசாமி காங்கேயம் அழைத்து சென்று பத்திர எழுத்தர் மூலம் நிலத்தை குத்தகைக்கு விடுவதாக சொல்லி எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தரவடிவேல், குப்புசாமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பழனிசாமியும், வள்ளியாத்தாளும் வீட்டிற்குள் தூங்கினார்கள். வீட்டிற்கு வெளியே உள்ள திண்ணையில் போட்டு இருந்த கட்டிலில் சுந்தரவடிவேல் படுத்து இருந்தார். அப்போது அங்கு அரிவாளுடன் சென்ற குப்புசாமி, சுந்தரவடிவேலை வெட்டிகொலை செய்து விட்டு அரிவாளுடன், செங்கோடம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் முன்பு சரண் அடைந்தார்.
இது குறித்து ஊதியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சுந்தரவடிவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குப்புசாமியை போலீசார் கைது செய்தனர்.