2–வது முறையாக சம்பவம்: டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு போலீசார் தீவிர விசாரணை
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள டாஸ்மாக் கடையின் சுவரில் மர்ம நபர்கள் 2–வது முறையாக துளையிட்டு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடி சென்றனர்.
ஓட்டப்பிடாரம்,
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள டாஸ்மாக் கடையின் சுவரில் மர்ம நபர்கள் 2–வது முறையாக துளையிட்டு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் கடைஓட்டப்பிடாரம்– புதியம்புத்தூர் செல்லும் சாலையில் முப்பிலிவெட்டி கிராமம் அருகே அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடையில் அதே ஊரை சேர்ந்த டேனியல் மகன் வெஸ்லின் டைடஸ் (வயது 46) என்பவர் சூப்பிரவைசராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம் போல் கடந்த 6–ந்தேதி இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
நேற்று முன்தினம் காலையில் அவர் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் முன்பு இருந்த கண்காணிப்பு கேமிரா உடைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து அவர் கடையின் பின்புறம் சென்று பார்த்தார். அப்போது கடையின் பின்புற சுவரில் மர்ம நபர்கள் துளையிட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மதுபாட்டில்கள் திருட்டுஇதுகுறித்து உடனடியாக அவர் புதியம்புத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மாதவராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கடையை திறந்து பார்வையிட்டனர். அப்போது மர்ம நபர்கள் கடையில் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களையும், கேமிராக்களில் பதிவான காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்கையும் எடுத்து சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2–வது சம்பவம்கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே கடையின் பின்புற சுவரில் மர்ம நபர்கள் துளையிட்டு சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடி சென்றனர். இதனையடுத்து அந்த கடையில் கண்காணிப்பு கேமிராக்கள் வைக்கப்பட்டன. தற்போது அதே கடையில் 2–வது முறையாக திருட்டு சம்பவம் நடந்து உள்ளது போலீசாருக்கு சவாலாக அமைந்து உள்ளது.