சத்தியமங்கலத்தில் பட்டறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரிக்கு தீ வைப்பு போலீசார் விசாரணை
சத்தியமங்கலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரிக்கு தீ வைத்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 30). இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். இந்த லாரியை பழுதுபார்க்க ரங்கசமுத்திரம் பகுதியில் பவானி ஆறு அருகே உள்ள ஒரு பட்டறையில் விட்டிருந்தார். இதைத்தொடர்ந்து லாரி பழுதுபார்க்கப்பட்டு பட்டறைக்கு வெளியே நேற்று முன்தினம் இரவு நிறுத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அந்த லாரியில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் லாரியின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. இதை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்தார்கள். உடனே ஓடிச்சென்று தீயை அணைத்தனர். எனினும் லாரியின் முன்பகுதி முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. யாரோ மர்மநபர்கள் லாரிக்கு தீ வைத்தது தெரியவந்தது.
இதுகுறித்து அசோக்குமார் சத்தியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் லாரிக்கு தீ வைத்த மர்மநபர்கள் யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.