குண்டர் சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த வாலிபரை தாக்கி கை–கால் உடைப்பு


குண்டர் சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த வாலிபரை தாக்கி கை–கால் உடைப்பு
x
தினத்தந்தி 8 Aug 2018 11:15 PM GMT (Updated: 8 Aug 2018 8:42 PM GMT)

குண்டர் சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த வாலிபரை தாக்கி கை, காலை உடைத்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சென்னிமலை,

பெருந்துறை அருகே உள்ள ஈங்கூர் வெட்டுக்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 38). இவர் மக்கள் சேவை இயக்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை நடத்தி வந்தார். தொழில் அதிபர்கள் பலரை பணம் கேட்டு மிரட்டுவதாக அவர் மீது புகார்கள் எழுந்தது.

கடந்த மாதம் பெருந்துறையை சேர்ந்த தொழில் அதிபர் சந்திரசேகரை பணம் கேட்டு மிரட்டியதாக பெருந்துறை போலீசார் நந்தகுமாரை கைது செய்தார்கள். அவர்மீது 5 வழக்குகள் இருந்ததால் ஈரோடு மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் கடந்த வாரம் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்தநிலையில், நேற்று காலை 11 மணி அளவில் நந்தகுமார் பணிக்கம்பாளையத்தில் இருந்து பெருந்துறைக்கு தன்னுடைய மகனுடன் மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது, ஒரு ஜீப்பில் வந்த 2 பேர் அவரை மறித்து வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏற்றிக்கொண்டு சென்றனர். பின்னர் அவரை கட்டையால் தாக்கி, அவருடைய ஒரு கையையும், காலையும் உடைத்து பெருந்துறை ஆர்.எஸ்.அருகே கோரக்காட்டுவலசு என்ற இடத்தில் சாலையோரம் வீசிச்சென்று விட்டார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்த பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் சுகவனம் ஆகியோர் போலீசாருடன் சென்று, அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து மேலும் வழக்குப்பதிவு செய்து, நந்தகுமாரை தாக்கிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story