உண்மைக்கு புறம்பாக சமூக ஊடகங்களில் பரப்பும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை


உண்மைக்கு புறம்பாக சமூக ஊடகங்களில் பரப்பும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 Aug 2018 11:30 PM GMT (Updated: 10 Aug 2018 9:52 PM GMT)

உயர் அலுவலர்கள் குறித்து அவர்களது நிர்வாகம் சார்ந்த தகவல்களை உண்மைக்கு புறம்பாக சமூக வலைத்தளங்களில் பரப்பும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

‘மை சைல்டு மை கேர்’ என்ற திட்டத்திற்கு கட்டாயத்தின் பேரில் நிதி பெற்றதாக கூறும் தகவல் தவறானது என்பது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. மேலும் ‘மை சைல்டு மை கேர்’ திட்டத்திற்கு விருப்பமின்றி நிதி அளித்தவர்கள் அதனை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின்பேரில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் 3-ம் பருவத் தேர்வில் 6, 7, 8, 9-ம் மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் சரியாக திருத்தம் செய்யவில்லை என்று புகார்கள் வந்தன. இது குறித்து விடைத் தாள்களை பெற்று மூத்த தலைமை ஆசிரியர்களைக் கொண்டு கூர்ந்தாய்வு செய்யப்பட்டது. அதில் விடைத்தாள்களில் திருத்தம் செய்யாமலேயே மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதும் தவறான விடைகளுக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதும் மொத்த மதிப்பெண்களின் கூடுதல் 50 முதல் 100 வரை வேறுபாடு உள்ளதும் இவை உள்பட பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டு உள்ளது. கூர்ந்தாய்வு முடிந்த நிலையில் பெறப்பட்ட விடைத்தாள்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

கல்வி மாவட்ட அளவில் பாட வல்லுனர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பள்ளிகளைப் பார்வையிட்டு, அவர்களின் பார்வையின் அடிப்படையில் பாட முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர்.

பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான ஊதியமும், கலைத்திருவிழா நடத்த அனுமதிக்கப்பட்ட ஊதியமும் உரிய பற்றுச்சீட்டு பெறப்படாமையால், பற்றுச்சீட்டு வரவர தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவை எப்போதும் பின்பற்றப்படும் அலுவலக நிர்வாக நடைமுறையாகும்.

உயர் அலுவலர்களின் நிர்வாகம் சார்ந்த தகவல்களை உண்மைக்குப் புறம்பாக சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பும் ஆசிரியர்களின் பெயர் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. வருங்காலங்களில் இதுபோல் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது உரிய துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story