மாவட்ட செய்திகள்

விசைப்படகு மீது கப்பல் மோதி விபத்து: மாயமான 9 மீனவர்களை மீட்கக்கோரி ராமன்துறையில் உண்ணாவிரதம் + "||" + Ship crash into boat: Fasting in Ramanadurai to rescue 9 fishermen

விசைப்படகு மீது கப்பல் மோதி விபத்து: மாயமான 9 மீனவர்களை மீட்கக்கோரி ராமன்துறையில் உண்ணாவிரதம்

விசைப்படகு மீது கப்பல் மோதி விபத்து: மாயமான 9 மீனவர்களை மீட்கக்கோரி ராமன்துறையில் உண்ணாவிரதம்
மாயமான 9 மீனவர்களை மீட்கக்கோரி ராமன்துறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கருங்கல்,

விசைப்படகு மீது கப்பல் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் கடலில் மாயமான மீனவர்களை மீட்கக்கோரி ராமன்துறை மீனவ மக்கள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். பேச்சுவார்த்தை நடத்திய கலெக்டரிடம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.


குமரி மாவட்டம் ராமன்துறையை சேர்ந்த ஏசுபாலன் உள்பட 14 மீனவர்கள் கடந்த 6-ந் தேதி இரவு கொச்சி முனம்பம் துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர். 7-ந் தேதி அதிகாலை ஆழ்கடலில் சென்ற விசைப்படகு மீது அந்த வழியாக வந்த ஒரு கப்பல் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் ராமன்துறையை சேர்ந்த யாக்கோபு, யுகநாதன் மற்றும் முள்ளூர்துறையை சேர்ந்த சகாயராஜ் ஆகிய 3 மீனவர்கள் இறந்தனர். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் மீதமுள்ள 9 மீனவர்களின் கதி என்ன? என்று தெரியவில்லை. பிணமாக மீட்கப்பட்டவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் மாயமான 9 மீனவர்களையும் மீட்கக்கோரி ராமன்துறையில் நேற்று தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் ராமன்துறை மற்றும் முள்ளூர்துறை மீனவ மக்களும், மீனவ அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரளாக கலந்து கொண்டனர். இதனால் கடற்கரை பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

இதைத் தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாயமான மீனவர்களை மீட்டு தாருங்கள் என்று கேட்டபடி உறவினர்கள் கதறி அழுதனர். அவர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆறுதல் கூறினார். உருக்கமான கோரிக்கை விடுத்த மீனவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

அதன் பிறகு கலெக்டர் பிரசாந்த் வடநேரே நிருபர்களிடம் கூறியபோது, கேரள மாநிலம் கொச்சி கடல் பகுதியில் விசைப்படகு மீது கப்பல் மோதியதால் கடலில் விழுந்து மாயமான 9 மீனவர்களையும் தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. இந்த பணியில் கப்பல் படை மற்றும் கடலோர காவல்படை ஆகியவை இணைந்து ஈடுபட்டு வருகின்றன. மேலும், அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேடுதல் வேட்டை நடக்கிறது. இந்த விபத்து குறித்து இந்திய கப்பல் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். மீனவர்கள் சென்ற விசைப்படகு மீது மோதிய கப்பலை கண்டுபிடித்து சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பேட்டியின்போது பத்மநாபபுரம் கோட்டாட்சியர் ராஜகோபால் சுங்கரா, விளவங்கோடு தாசில்தார் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.