இலங்கை கடற்படையால் 27 பேர் சிறைபிடிப்பு: சோகத்தில் ஆழ்ந்த மீனவ கிராம மக்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை


இலங்கை கடற்படையால் 27 பேர் சிறைபிடிப்பு: சோகத்தில் ஆழ்ந்த மீனவ கிராம மக்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 12 Aug 2018 4:45 AM IST (Updated: 12 Aug 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையினர் நம்புதாளையை சேர்ந்த மீனவர்கள் உள்பட 27 பேரை சிறைபிடித்து சென்றனர். இதனால் மீனவ கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதையொட்டி மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

தொண்டி,

திருவாடானை தாலுகா நம்புதாளையை சேர்ந்த மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதப்பட்டினம் கடற்கரை கிராமத்தில் பெரிய அளவிலான படகுகள் மூலம் ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 9–ந்தேதி நம்புதாளையை சேர்ந்த ஆறுமுகம், கிருஷ்ணன், பழனி ஆகியோருக்கு சொந்தமான 3 நாட்டு வள்ளங்களில் 22 மீனவர்களும், நாகை மாவட்டம் வானகிரியை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகு ஒன்றில் 5 மீனவர்களும் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இவர்கள் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இவர்களை சுற்றிவளைத்ததுடன், 3 நாட்டு வள்ளம், பைபர் படகு மற்றும் அதில் இருந்த மீன்கள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் நம்புதாளையை சேர்ந்த பாலா, தினேஷ், கெங்கமுத்து, ராமமூர்த்தி, சந்தனமாரி, வில்லாயுதம், முத்துக்கனி, லோகமுத்து, கிருஷ்ணன், பவித்ரன் உள்பட 22 மீனவர்களையும், நாகை மாவட்டம் வானகிரியை சேர்ந்த 5 மீனவர்களையும் எல்லை தாண்டி வந்ததாக கூறி சிறைபிடித்தனர். அதனைதொடர்ந்து இந்த மீனவர்களை யாழ்ப்பாணம் கடற்படை முகாமிற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் அனைத்து மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் காங்கேசன் துறைமுகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இச்சம்பவத்தை தொடர்ந்து நம்புதாளை மீனவ கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் நம்புதாளை மீனவர்கள் யாரும் நேற்று கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story