குன்னத்தூர் அருகே நூற்பாலையில் கிரிக்கெட் மட்டையால் தாக்கி வாலிபர் கொலை, 3 பேர் கைது
குன்னத்தூர் அருகே நூற்பாலையில் கிரிக்கெட் மட்டையால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒப்பந்ததாரர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குன்னத்தூர்,
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் போதியாஹோ(வயது 19). இவரையும், அதே பகுதியை சேர்ந்த பிரேமானந்தர்(22), ராஜீவ்சாகு(22) ஆகியோரையும் வேலைக்காக ஒடிசாவை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஹரிலால் தனசன்னா(28) திருப்பூர் மாவட்டம் குன்னத்தூருக்கு அழைத்து வந்தார். பின்னர் குன்னத்தூர் அருகே குறிச்சி பிரிவில் தனியார் நூற்பாலையில் 3 பேரையும் ஹரிலால் தனசன்னா வேலைக்கு சேர்த்து விட்டார். 3 பேரும் அங்கு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இந்த நூற்பாலையில் தங்கி வேலை செய்து வந்தனர்.
இவர்கள் 3 பேரின் சம்பளத்தை ஒடிசாவில் உள்ள அவருடைய பெற்றோருக்கு ஹரிலால் தனசன்னா அனுப்பி விடுவது வழக்கம். ஆனால், இந்த மாதம் 10–ந்தேதிக்கு மேல் ஆகியும் அவர் சம்பள பணம் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று முன்தினம் மாலை போதியாஹோ தனக்கு வழங்க வேண்டிய சம்பள பணத்தை உடனே கொடுக்கும்படி ஹரிலால் தனசன்னாவிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர், ‘‘உனது சம்பளத்தை வீட்டுக்கு அனுப்பி விடுகிறேன், இப்போது எனது மனைவிக்கு உடல் நிலை சரியில்லை, இரவு வா தருகிறேன்’’ என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து போதியாஹோ நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு ஹரிலால் தனசன்னாவிடம் சென்று சம்பள பணத்தை கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஹரிலால் தனசன்னா, பிரேமானந்தர், ராஜீவ்சாகு ஆகியோருடன் சேர்ந்து போதியாஹோவை கிரிக்கெட் மட்டையால் தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குன்னத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோபியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி போதியாஹோ பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் குன்னத்தூர் போலீசார் நேற்று நூற்பாலைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது, சம்பள தகராறில் ஹரிலால் தனசன்னா, பிரேமானந்தர், ராஜீவ்சாகு ஆகியோர் போதியாஹோவை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒப்பந்ததாரர் ஹரிலால் தனசன்னா உள்பட 3 பேரையும் கைது செய்தனர். பின்னர், 3 பேரும் அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.