கோவையில் பிரபல ரவுடி கொலை: கைதான ரியல் எஸ்டேட் அதிபர் வாக்குமூலம்


கோவையில் பிரபல ரவுடி கொலை: கைதான ரியல் எஸ்டேட் அதிபர் வாக்குமூலம்
x
தினத்தந்தி 13 Aug 2018 5:15 AM IST (Updated: 13 Aug 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ததால் பிரபல ரவுடியை கொன்றதாக கைதான ரியல் எஸ்டேட் அதிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவை,

கோவை ராமநாதபுரம் பாலமுருகன் லே–அவுட்டை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). பிரபல ரவுடியான இவருக்கு காட்டூர் சரவணன் என்ற பெயரும் உண்டு. இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 18 வழக்குகள் உள்ளன. இவர் சோமசுந்தரம் மில் அருகே நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் கத்தியால் கத்தி கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த காட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர், கொலை செய்யப்பட்ட சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். ரவுடி சரவணனை கொன்றவரை போலீசார் தேடி வந்தனர்.

போலீசாரின் விசாரணையில் சரவணனை, அவருடைய நீண்ட கால நண்பரான காட்டூர் பட்டேல் ரோட்டை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் பிரமுகர் குங்பூ ஆறுமுகம் (50) என்பவர் கொலை செய்ததும் முன்விரோதம் காரணமாக சரவணன் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து குங்பூ ஆறுமுகத்தை போலீசார் நேற்று காலை கைது செய்தனர். ரவுடி சரவணனை கொலை செய்தது குறித்து குங்பூ ஆறுமுகம் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

நான் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு காட்டூரில் வசித்ததில் இருந்தே சரவணனை எனக்கு நன்றாக தெரியும். அவர் என்னிடம் பணம் கேட்டு வருவார். சில நேரங் களில் நான் பணம் கொடுத்தேன்.

இதனால் அவர், என்னிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்தார். பணம் தரவில்லை என்றால் என்னையும், எனது மகனையும் கொன்று விடுவதாக மிரட்டினார். அவரை இப்படியே விட்டால் என்னை கொன்று விடுவார் என்பதால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.

அதன்படி நேற்று முன்தினம் காலையில் பணம் தருவதாக கூறி சரவணனுக்கு போன் செய்து சோமசுந்தரம் மில் அருகே உள்ள ரெயில் கீழ் பாலத்துக்கு வருமாறு கூறினேன். அதை நம்பிய அவர் சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். அப்போது நான் அவரிடம் உனக்கு எதற்கு பணம் தர வேண்டும் என்று கேட்டேன். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

பின்னர் பணம் கொடுக்கிறேன், மோட்டார் சைக்கிளை எடு என்று கூறி அவரது மோட்டார் சைக்கி ளின் பின்னால் உட்கார்ந்தேன். அப்போது நான் ஏற்கனவே தயாராக கொண்டு வந்திருந்த கத்தியால் சரவணனின் வயிற்றில் குத்தினேன். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். உடனே நான் அவருடைய மார்பில் கத்தியால் குத்தினேன். இதில் சரவணன் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே நான் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டேன். பிறகு போலீசார் என்னை கைது செய்தனர்.

இவ்வாறு குங்பூ ஆறுமுகம் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குங்பூ ஆறுமுகம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை வைத்து ‘மிக மிக அவசரம்’ என்ற சினிமாப்படத்தை தயாரித்து வந்தார். அதன் படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் கொலை வழக்கில் சிக்கி குங்பூ ஆறுமுகம் கைது செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட குங்பூ ஆறுமுகம் மீது இதற்கு முன்பு வழக்குகள் எதுவும் இல்லை. தன்னை ரவுடி சரவணன் கொலை செய்து விடுவார் என்று பயந்து இந்த கொலையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story