ராணிப்பேட்டை: பெல் நிறுவன அதிகாரி வீட்டில் 70 பவுன் நகை திருட்டு


ராணிப்பேட்டை: பெல் நிறுவன அதிகாரி வீட்டில் 70 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 12 Aug 2018 11:00 PM GMT (Updated: 12 Aug 2018 9:35 PM GMT)

ராணிப்பேட்டை பெல் நிறுவன அதிகாரி வீட்டில் 70 பவுன் நகை திருடு போனது. குடும்பத்துடன் கேரளாவில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றபோது மர்மநபர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை பெல் நிறுவன அதிகாரி வீட்டில் நடந்த இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் பொது மேலாளராக (வணிகப்பிரிவு) பணிபுரிந்து வருபவர் அனில்குமார் (வயது 55). இவருடைய மனைவி கிரிஜா. இவர்களுடைய மகன் அஜித்குமார், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மகள் காயத்ரி சென்னையில் படித்து வருகிறார்.

அனில்குமார், பெல் குடியிருப்பு வளாகத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு குடும்பத்துடன் செல்ல அனில்குமார் திட்டமிட்டார். கடந்த 8-ந் தேதி அனில்குமார் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார்.

அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு அனில்குமார் மற்றும் குடும்பத்தினர் நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அனைவரும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு அறைகளில் ஆங்காங்கே பொருட்கள், துணிகள் சிதறி கிடந்தன. பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 70 பவுன் நகை, ரூ.4 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து அனில்குமார் சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர் ஸ்ரீதரன், திருட்டு போன வீட்டில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை சேகரித்தார். மேலும் வேலூரில் இருந்து மோப்பநாய் ‘சன்னி’ வரவழைக்கப்பட்டது. திருட்டு நடந்த வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற மோப்பநாய் ‘சன்னி’ யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதற்கிடையே தகவல் அறிந்த வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் அங்கு வந்து திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு, அனில்குமார் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் குறித்து தடயங்கள் கிடைத்துள்ளன. எனவே விரைவில் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெல் குடியிருப்பு வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து நிர்வாகத்திடம் பேசி வருகிறோம். குடியிருப்பு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்படும்” என்றார்.

இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிந்து நகை, பணத்தை திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர். பெல் நிறுவன அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story