13 மாவட்டங்களில் அடுத்த மாதம் 10-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் - விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் முடிவு


13 மாவட்டங்களில் அடுத்த மாதம் 10-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் - விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் முடிவு
x
தினத்தந்தி 12 Aug 2018 11:30 PM GMT (Updated: 12 Aug 2018 10:57 PM GMT)

விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அடுத்த மாதம் 10-ந் தேதி முதல் 13 மாவட்டங்களில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்று திருப்பூரில் நடைபெற்ற விவசாய சங்கங்களின் கூட்டியக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் உள்பட 13 மாவட்டங்களில் விவசாய நிலங்களின் வழியாக உயர் மின்கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் கொங்கு ராஜாமணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் மதுசூதனன் வரவேற்று பேசினார்.

தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம், உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து, ஏர்முனை இளைஞர் அணி மாநில தலைவர் என்.எஸ்.பி. வெற்றி, பா.ம.க. மாநில துணைத்தலைவர் பொங்கலூர் மணிகண்டன், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் ஈஸ்வரன் உள்பட விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது.

* விவசாயிகள் கோரிக்கை மாநாட்டுக்கு பின் மத்திய, மாநில மின்வாரியங்களின் சார்பில் கூட்டியக்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைத்து 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதில் தீர்வு கிடைக்கும் வரை பணிகளை நிறுத்தி வைப்பது என பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதனையும் மீறி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினரால் திட்டப்பணிகள் செய்வதை வன்மையாக கண்டிப்பது.

* விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்தால் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கக்கூடாது. அத்துமீறி விவசாய நிலங்களில் நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* உயர் மின்கோபுர திட்டத்தால் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக மாநிலம் முழுவதும் மாவட்ட கலெக்டரின் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து, விவசாயிகளிடம், மாவட்ட விவசாய பிரதிநிதிகளிடம் கருத்துகேட்டு, அதன்படி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

* விவசாயிகளின் கோரிக்கைகள் முறையாக பரிசீலித்து நிறைவேற்றப்படாவிட்டால் மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 மாவட்டங்களில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந்தேதி முதல் தீவிரமாக நடத்துவது.

என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. போராட்டம் நடைபெறும் இடங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story