சம்பா சாகுபடிக்கு தண்ணீரை முறை வைக்காமல் வழங்க வேண்டும் கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை


சம்பா சாகுபடிக்கு தண்ணீரை முறை வைக்காமல் வழங்க வேண்டும் கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 14 Aug 2018 4:15 AM IST (Updated: 14 Aug 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

சேதுபாவாசத்திரம் பகுதியில் சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீரை முறை வைக்காமல் வழங்க வேண்டும் என்று கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை வைத் துள்ளனர்.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் அனைத்தும் சரியான மழை இல்லாததால் போதுமான அளவு தண்ணீரின்றி இருந்து வருகிறது. இதனால் ஆழ்குழாய் கிணறுகள் அனைத்திலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேட்டூர் அணை கடந்த மாதம் 19-ந் தேதி திறக்கப்பட்ட நிலையில் சம்பா சாகுபடிக்கு நாற்றுவிட ஆடிப்பட்டம் கைகூடிவிடும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் கடைமடை பகுதிக்கு அணை திறந்து 25 நாட்களுக்கு பிறகு கடந்த 10-ந் தேதி முதல் முறைவைத்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் கடைமடை பகுதியினர் முதலில் குடிநீர் பஞ்சத்தை போக்க வேண்டும் என்ற நிலையில் மேட்டூர் அணை திறந்து கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்த வுடன் ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் தற்போது கொளுத்தும் வெயிலின் தாக்கத்தால் இதுவரை முறை வைத்து வழங்கிய தண்ணீர் கடைமடையின் கடைசி வரை சென்றடையவில்லை.

ஊமத்தநாடு, நாடியம், கொரட்டூர், பெருமகளூர், சோலைக்காடு கழனிக் கோட்டை விளங்குளம் போன்ற பகுதிகளில் உள்ள 1000 ஏக்கருக்கு மேல் பாசனம் தரக்கூடிய பெரிய ஏரிகளும், சுமார் 200-க்கும் மேற்பட்ட சிறு குளங்களும் வறண்ட நிலையில் உள்ளன. காரணம் கடைமடை பகுதியில் இதுவரை போதுமான மழை கிடையாது. தற்போது கடைமடை விவசாயிகள் நாற்றுவிடுவதற்கான ஆயத்த பணிகளை கூட மேற்கொள்ளவில்லை. அதே சமயம் கடைமடை பகுதிக்கு அணை திறந்த நாள் முதல் 5 நாட்கள் வீதம் தண்ணீர் முறை வைத்து வழங்கி இருந்தால் கூட ஏரி, குளங்களும் நிரம்பி இருக்கும். ஆடிப்பட்டம் நாற்றுவிடும் பணிகளும் நிறைவடைந்திருக்கும்.

ஆனால் அளவுக்கு அதிகமாக தண்ணீர் அணைக்கு வந்து உபரி நீர் கடலில் கலக்கும் சூழ்நிலையிலும் கடைமடை விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். எனவே, சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிக்கு சம்பா சாகுபடிக்கு நாற்று விடுவதற்கு தேவையான தண்ணீரை முறை வைக்காமல் வழங்க வேண்டும். முறை வைக்காமல் தண்ணீர் வழங்கினால் நாற்றுவிடும் பணி நிறைவடைவதுடன், ஏரி, குளங்களும் முழுமையாக நிரம்பி விடும். எனவே கடைமடை பகுதிக்கு முறை வைக்காமல் தண்ணீர் வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடைமடை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Next Story