குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x
தினத்தந்தி 15 Aug 2018 3:00 AM IST (Updated: 15 Aug 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தென்காசி, 

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் கடந்த மே மாதம் இறுதியில் சீசன் தொடங்கியது. தற்போது வரை அருவிகளில் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கிறது.
கடந்த வாரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையினால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தொடர்ந்து 3 நாட்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 11-ந் தேதி அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக குற்றாலம் பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்தே சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த அருவிகளில் காலை 7 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் புலியருவி, சிற்றருவியில் குளித்து சென்றனர்.

இன்று (புதன்கிழமை) சுதந்திர தின விடுமுறை நாள் என்பதால் குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தால் மட்டுமே அவர்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள மற்றொரு பிரதான அருவியான மணிமுத்தாறு அருவியிலும் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

பணகுடி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்கிருந்து உற்பத்தியாகும் ஆலந்துறை ஆறு, குத்திரபாஞ்சான் அருவி ஓடை, கன்னிமாறன் தோப்பு ஓடை, கல்லாண்டி ஓடை ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பணகுடி மியாபுதுகுளம் நிறைந்து மறுகால் செல்கிறது. பரிவிரி சூரியன்குளம், நகரை குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக பணகுடி அனுமன் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பணகுடி மெயின் ரோடு அனுமன் நதி பாலம் வரை தண்ணீர் செல்கிறது. பணகுடி சுற்று வட்டாரத்தில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story