சுதந்திர தினத்தையொட்டி கரூர் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
நாடு முழுவதும் இன்று (புதன்கிழமை) 72–வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்திலுள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கரூர்,
நாடு முழுவதும் இன்று (புதன்கிழமை) 72–வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்திலுள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கரூர் ரெயில் நிலைய முன்புற பகுதியில் நவீன ஸ்கேனர் கருவி பொருத்தப்பட்டு தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் அதன் வழியாக உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் மோப்பநாயுடன் நின்ற போலீசார், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பயணிகளின் உடைமைகளையும் நன்கு பரிசோதித்து அபாயகரமான பொருள் ஏதும் உள்ளதா? என சோதனையிட்டனர். இதற்கிடையே நேற்று கரூர் ரெயில் நிலைய பாதுகாப்பு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா உள்பட போலீஸ் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சந்தேகப்படும் படியான நபர்கள் யாரும் இருப்பின் உடனடியாக விசாரித்து விட்டு அனுப்புமாறும், ரெயில் நிலையத்திற்குள் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுமாறும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.