பெருஞ்சாணி அணையில் 12 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறப்பு கால்வாய் உடைந்து சாலை துண்டிப்பு


பெருஞ்சாணி அணையில் 12 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறப்பு கால்வாய் உடைந்து சாலை துண்டிப்பு
x
தினத்தந்தி 15 Aug 2018 4:45 AM IST (Updated: 15 Aug 2018 3:46 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. பெருஞ்சாணி அணையில் இருந்து 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் உபரியாக திறந்து விடப்பட்டது. இதனால் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டதால் பெருஞ்சாணி-பொன்மனை இடையே போக்குவரத்து தடைபட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பகலிலும் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 76.20 அடியாக உயர்ந்தது. பெருஞ்சாணி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு நேற்று மாலையில் 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கால்வாய் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணைக்கும், புத்தன் அணைக்கும் இடைப்பட்ட பகுதியில் குற்றியாணி என்ற இடத்தில் உபரிநீர் கால்வாயில் நேற்று மாலையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் பாய்ந்தோடும் வெள்ளம் அந்த பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தின் வழியாக பரளியாற்றில் கலந்தது.

இதனால் பரளியாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் பெருஞ்சாணி-பொன்மனை இடையே உள்ள சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. குழித்துறையில் ஆற்றின் மீதுள்ள தடுப்பணையை மூழ்கடித்து வெள்ளம் பாய்வதால் பொதுமக்கள் யாரும் இந்த தடுப்பணை வழியாக நடந்து செல்லக்கூடாது என பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரதுறை சார்பில் தடை விதித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால், அணையின் காயல் பகுதியில் நிரம்பி கரையோர குடியிருப்புகளுக்கு வெள்ளம் புகுந்தது. கீரிப்பாறை அருகே பரளியாறு, புதுநகர் போன்ற கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. புதுநகர் பகுதியில் உள்ள 3 வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

இதனால், வீடுகளில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். திற்பரப்பு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நேற்று 5-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- பேச்சிப்பாறை- 57.4, பெருஞ்சாணி- 68, சிற்றார் 1- 48.4, சிற்றார் 2- 39, மாம்பழத்துறையாறு- 33, புத்தன் அணை- 70.2, பூதப்பாண்டி- 60.2, கன்னிமார்- 87.2, கொட்டாரம்- 12.6, மயிலாடி- 27.5, நாகர்கோவில்- 27, சுருளக்கோடு- 58.4, பாலமோர்-70.4, ஆரல்வாய்மொழி- 29, கோழிப்போர்விளை- 33, அடையாமடை- 57, குருந்தங்கோடு- 2.4, முள்ளங்கினாவிளை- 14, ஆனைக்கிடங்கு- 23.2, திற்பரப்பு- 42.4, என்ற அளவில் மழை பதிவாகி உள்ளது. 

Next Story