டிரைவரை கத்தியால் குத்தி விட்டு காரை கடத்தி சென்ற வழக்கு: வாலிபர்கள் 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை - பல்லடம் கோர்ட்டு தீர்ப்பு


டிரைவரை கத்தியால் குத்தி விட்டு காரை கடத்தி சென்ற வழக்கு: வாலிபர்கள் 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை - பல்லடம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 15 Aug 2018 4:17 AM IST (Updated: 15 Aug 2018 4:17 AM IST)
t-max-icont-min-icon

டிரைவரை கத்தியால் குத்தி கீழே தள்ளி விட்டு காரை கடத்தி சென்ற வழக்கில் வாலிபர்கள் 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து பல்லடம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

பல்லடம்,

கோவை விரும்மாண்டம்பாளையம் நஞ்சேகவுண்டன்புதூர் விவேகானந்தா வீதியை சேர்ந்தவர் அருள்பிரகாஷ் (வயது 22). இவர் கோவையில் உள்ள ஏ.கே.டிராவல்ஸ் உரிமையாளர் ஆனந்தகுமார் என்பவருக்கு சொந்தமான காரை வாடகைக்கு ஓட்டி வந் தார். இந்த நிலையில் கடந்த 8.3.2013 அன்று இரவு ஆனந்தகுமாரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது எதிர்முனையில் பேசியவர் பழனிவரை செல்வதற்கு வாடகைக்கு கார் ஒன்று வேண்டும் என்றும், அந்த காரை கோவை புண்ணியகோடி தெருவில் உள்ள சரவணா வணிக வளாகத்திற்கு எடுத்து வருமாறும் கூறினார். இதையடுத்து ஆனந்தகுமார், டிரைவர் அருள்பிரகாசுக்கு மேற்கண்ட முகவரிக்கு செல்லுமாறு குறுந்தகவல் அனுப்பினார்.

இதையடுத்து அருள்பிரகாஷ், புண்ணியகோடி தெருவில் உள்ள சரவணா வணிக வளாகத்திற்கு காரை ஓட்டிச்சென்றார். அங்கு 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் 2 பேரும் காரில் ஏறி பின் இருக்கையில் அமர்ந்து கொண்டனர். பின்னர் கார் அங்கிருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக பழனி முருகன் கோவிலுக்கு சென்றது. அப்போது அங்கு மேலும் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களும் காரில் ஏறிக்கொண்டனர்.

பின்னர் அங்கிருந்து கார் கோவை புறப்பட்டது. காரை அருள்பிரகாஷ் ஓட்டினார். காரின் டிரைவர் இருக்கை அருகே ஒருவரும், பின் இருக்கையில் 3 பேரும் அமர்ந்து இருந்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் புள்ளியப்பம்பாளையம் பிரிவு அருகே 9.3.2013 அன்று காலை 5 மணிக்கு கார் வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென்று காரில் இருந்த 4 பேரும் கத்தியால், டிரைவர் அருள்பிரகாசை குத்தி, அவரை கீழே தள்ளி விட்டு காரை கடத்தி சென்று விட்டனர். இது குறித்து அருள்பிரகாஷ், பல்லடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை கடத்தி சென்ற 4 பேரையும் வலை வீசி தேடி வந்தனர். தீவிர விசாரணைக்கு பிறகு அருள்பிரகாசை கத்தியால் குத்தி விட்டு, காரை கடத்தி சென்று இருப்பது தர்மபுரி மாவட்டம் திண்டலனூரை சேர்ந்த சந்திரசேகரன் என்ற வாசுதேவன் (22), கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் நியூ காலனி வீதியை சேர்ந்த தாமஸ் அருண்பிரசாத் (22), சேலம் மாவட்டம் கெங்கவல்லி வீரகனூரை சேர்ந்த பிரபு(30 ) மற்றும் அவரது தம்பி அருண்(28 )ஆகியோர் என தெரியவந்தது.

இதையடுத்து அந்த வழக்கில் சந்திரசேகரன், தாமஸ் அருண்பிரசாத், பிரபு மற்றும் அருண் ஆகிய 4 பேரையும் பல்லடம் போலீசார் கைது செய்து திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு பல்லடத்தில் உள்ள சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் சார்புநீதிமன்ற நீதிபதி என்.எஸ்.மீனா சந்திரா இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில் சந்திரசேகரன் என்ற வாசுதேவனுக்கும், தாமஸ் அருண்பிரசாத் ஆகியோருக்கு தலா 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், பிரபு, அருண் ஆகியோருக்கு தலா 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் எம்.பொன்னுசாமி ஆஜராகி வாதாடினார்.

Next Story