குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவிப்பு


குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Aug 2018 4:45 AM IST (Updated: 16 Aug 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன. மேலும் குமரி மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை கலெக்டர் பிரசாந்த் வடநேரே பார்வையிட்டார். அப்போது வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க ஏற்பாடு செய்தார். மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் உள்ள அணைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணையில் இருந்து இன்று (அதாவது நேற்று) அதிகாலை 4 மணியில் இருந்து 7 மணி வரை 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் உபரியாக திறந்து விடப்பட்டது. அதன் பிறகு 22 ஆயிரம் கனஅடியாக உபரிநீரின் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மணிநேரமும் அணைகள் கண்காணிக்கப்பட்டு அதன் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக தோவாளை, கல்குளம் தாலுகாவில் தலா ஒரு குடிசையும், விளவங்கோடு தாலுகாவில் 4 குடிசைகள் என மொத்தம் 6 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களில் மொத்தம் 55 குடிசை வீடுகள் பகுதி அளவு சேதமடைந்துள்ளன. 21 மின்கம்பங்கள் சேதமடைந்ததுடன், 24 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. 4 படகுகள் மற்றும் 6 வள்ளங்கள் கனமழையினால் நாசமானது.

மேலும் மழை வெள்ளத்தால் பெருஞ்சாணி-குற்றியானி, தெரிசனங்கோப்பு-அருமநல்லூர், கோதையார் இடதுகரை சானல் கரை சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கீரிப்பாறை லேபர் காலனி சப்பாத்து பாலம் மற்றும் திருவட்டார் பரளியாறு பாலம் ஆகியவையும் சேதமடைந்துள்ளது.

குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பாதிக்கப்பட்ட இடங்களில் வசித்து வந்த மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு கீரிப்பாறை, பள்ளிக்கல், மங்காடு, பார்வதிபுரம், ஞாலம் ஆகிய இடங்களில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கீரிப்பாறை லேபர் காலனி பகுதியில் மழைநீர் புகுந்து பாதிக்கப்பட்ட 92 குடும்பங்களை சேர்ந்த 200 பேர் அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நாளை (அதாவது இன்று) குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகள் இன்று செயல்படாது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story