காரத்தொழுவு ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று வாலிபர் போராட்டம்


காரத்தொழுவு ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று வாலிபர் போராட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2018 4:15 AM IST (Updated: 16 Aug 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

காரத்தொழுவு ஊராட்சியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித்தரக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று வாலிபர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கணியூர்,

கணியூர் அருகே உள்ள காரத்தொழுவு பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் போதிய குடிநீர் வசதி, சாலை வசதி, கழிப்பிட வசதி, தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பகுதியினர் பலமுறை கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அத்துடன் காரத்தொழுவு பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரான சாதிக்பாட்ஷா (வயது 31) என்பவர் காரத்தொழுவு ஊராட்சி பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கோரி ஏற்கனவே 5 முறைக்கும் மேல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினார். ஆனால் இதுவரை எந்த வித அடிப்படை தேவைகளும் பூர்த்தி செய்யப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் காரத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பஸ் நிலையம் பின்புறம் உள்ள செல்போன் கோபுரத்தில் நேற்று காலை 11 மணி அளவில் சாதிக்பாட்ஷா ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் பலரும் கூடினார்கள். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கணியூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சசிக்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் காரத்தொழுவு கிராம நிர்வாக அதிகாரி முஜிபூர்ரகுமான் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் சாதிக்பாட்ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சாதிக்பாட்ஷா காரத்தொழுவு கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே கீழே இறங்குவேன் என்று கூறினார். இது தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் காரணமாக மதியம் 12 மணி அளவில் சாதிக்பாட்ஷா கீழே இறங்கிவந்தார். இதன் மூலம் சுமார் ஒரு மணி நேரம் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

பின்னர் காரத்தொழுவு கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் கிராம நிர்வாக அதிகாரி, கணியூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர், மடத்துக்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் சார்பில் கணேசன் (உதவி பொறியாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி காரத்தொழுவு ஊராட்சிக்கு விரைவில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அனைவரும் கலைந்துசென்றனர்.


Next Story