திருவாரூரில் உள்ள இல்லத்தில் கருணாநிதி உருவ படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி


திருவாரூரில் உள்ள இல்லத்தில் கருணாநிதி உருவ படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி
x
தினத்தந்தி 19 Aug 2018 4:30 AM IST (Updated: 19 Aug 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

திருவாருரில் உள்ள கருணாநிதி இல்லத்தில் அவரது உருவ படத்திற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

திருவாரூர்,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 7-ந் தேதி மரணம் அடைந்தார். எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கருணாநிதி, தான் வாழ்ந்த காலத்தில் தனது கருத்துரிமையை எப்படியெல்லாம் நிலைநாட்டினார் என்பதை அறியும் வகையில் ‘கருத்துரிமை காத்தவர் கலைஞர்’ என்ற தலைப்பில் ஊடக வல்லுனர்கள் பங்கேற்று புகழாரம் சூட்டிய நிகழ்ச்சி திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நேற்று காலை திருச்சியில் இருந்து காரில் புறப்பட்டு தஞ்சாவூர் வழியாக நாகை மாவட்டம் திருக்குவளை சென்றார். திருக்குவளையில் உள்ள கருணாநிதிக்கு சொந்தமான இல்லம் நூலகமாக மாற்றப்பட்டுள்ளது.

அங்கு சென்ற மு.க.ஸ்டாலின், நூலகத்தில் வைக்கப்பட்டு இருந்த தி.மு.க. தலைவர் மறைந்த கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள கருணாநிதி இல்லத்திற்கு வருகை தந்தார். அங்கு வைக்கப்பட்டு இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உருவ படத்திற்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அப்போது கனிமொழி எம்.பி., உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, மதிவாணன், திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன், புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நாஜிம் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் அவர் மாலையில் காரில் புறப்பட்டு தஞ்சாவூர், திருச்சி வழியாக மதுரைக்கு சென்றார்.

Next Story