ஊத்தங்கரை அருகே டிரைவர் கொலையில் மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 2 பேர் கைது


ஊத்தங்கரை அருகே டிரைவர் கொலையில் மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 19 Aug 2018 3:45 AM IST (Updated: 19 Aug 2018 3:28 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை அருகே டிரைவர் கொலையில் மனைவியின் கள்ளக்காதலன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மோட்டுரான்கொட்டாய் அருகே உள்ளது கஞ்சனூர். இந்த ஊரை சேர்ந்தவர் கோதண்டன் (வயது 38). டிரைவர். இவரது மனைவி விஜயலட்சுமி (32). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் ஊத்தங்கரை அருகே உள்ள கல்குண்டு என்ற இடத்தில் ரெயில் தண்டவாளத்தில் கோதண்டன் தலை சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த தகவல் அறிந்து சேலம் ரெயில்வே போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் கோதண்டன் தலையில் மர்ம நபர்கள் யாரோ கல்லை போட்டு கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கு கல்லாவி போலீசாருக்கு மாற்றப்பட்டது. அவர்கள் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்த ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சுனன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி கொலை தொடர்பாக கஞ்சனூரை சேர்ந்த பழனிவேல் என்கிற பழநேசன் (27), அவரது நண்பர் பிரசாந்த் என்கிற காளியப்பன் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். பிறகு அவர்களை ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

கைதான பழனிவேலுக்கும், கொலை செய்யப்பட்ட கோதண்டனின் மனைவி விஜயலட்சுமிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும், இது தொடர்பாக சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோதண்டனை, பழனிவேல் தனது நண்பருடன் சேர்ந்து தலையில் கல்லை போட்டு கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

Next Story