ராஜபாளையம் அருகே அரசு ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை - பணம் கொள்ளை
அரசு ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வடக்கு ஆண்டாள்புரம், மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் சண்முகநாதன். இவர் மதுரை மாவட்டம் பேரையூரில் உள்ள அரசு சித்தா ஆஸ்பத்திரியில் மருந்தாளுனராக பணியாற்றி வருகிறார். அவருடைய மகன் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். மகள் தஞ்சாவூரில் பணியாற்றி வருகிறார்.
மகள் பணியாற்றும் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, சண்முகநாதன் தனது குடும்பத்துடன் கடந்த வியாழக்கிழமை தஞ்சாவூர் சென்றார். நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய போது, வீட்டின் பின்புற வாசல் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டினுள் சென்று பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் தங்க நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரிய வந்தது. இதுதொடர்பாக ராஜபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது.
எனவே கைவரிசை காட்டிய மர்ம கும்பல் வாகனத்தில் ஏறி தப்பிச்சென்று இருக்கலாமென போலீசார் கருதுகின்றனர். போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனும் சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டார். கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.