மாவட்ட செய்திகள்

கார் பழுதடைந்ததால் மழையில் பரிதவித்த வாஜ்பாயை அரசு பஸ்சில் ஏற்றி வந்த பரமக்குடி கண்டக்டர் + "||" + The car is broken Vajpayee in the rain On a bus carrying government Paramakudi Conductor

கார் பழுதடைந்ததால் மழையில் பரிதவித்த வாஜ்பாயை அரசு பஸ்சில் ஏற்றி வந்த பரமக்குடி கண்டக்டர்

கார் பழுதடைந்ததால் மழையில் பரிதவித்த வாஜ்பாயை அரசு பஸ்சில் ஏற்றி வந்த பரமக்குடி கண்டக்டர்
கார் பழுதடைந்ததால் மழையில் பரிதவித்த வாஜ்பாயை அரசு பஸ்சில் பரமக்குடி கண்டக்டர் ஏற்றிவந்துள்ளார்.

பரமக்குடி,

பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன், ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவருடைய மனைவி உமாராணி. இவர்களுக்கு திலீபன், சுந்தர் சிங் என இரு மகன்கள் உள்ளனர். ராமச்சந்திரன் கடந்த 1980–ம் ஆண்டு பாண்டியன் போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியில் சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில் 1983–ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஒருநாள் சரியாக மாலை 5.35 மணி அளவில் பரமக்குடியில் இருந்து சென்ற டி.எம்.என்.5800 என்ற பஸ்சில் கண்டக்டராக ராமச்சந்திரனும், டிரைவராக பார்த்திபனூரை சேர்ந்த பாலுச்சாமி என்பவரும் பணியில் இருந்துள்ளனர்.

அப்போது நடந்த நிகழ்வுகள் குறித்து அந்த பஸ்சில் கண்டக்டராக பணியாற்றிய ராமச்சந்திரன் தினத்தந்தி நிருபரிடம் தனது மலரும் நினைவுகளை கூறியதாவது:– நாங்கள் சென்ற பஸ் திருப்புவனம் போலீஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது கனமழை கொட்டித்தீர்த்ததால் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இதனால் மக்கள் நடக்க முடியாமலும், வாகனங்கள் செல்ல முடியாமலும் மிகவும் சிரமம் ஏற்பட்டது. அதுசமயம் வெள்ளை உடையில் நின்ற சிலர் அந்த வழியாக சென்ற அனைத்து பஸ்களையும் நிறுத்தும்படி கைகாட்டினர்.

ஆனால் யாரும் நிற்கவில்லை. இதேபோல நாங்கள் சென்ற பஸ்சையும் அவர்கள் நிறுத்துமாறு கைகாட்டினர். இதைப்பார்த்த நான் உடனடியாக டிரைவர் பாலுச்சாமியிடம் பஸ்சை நிறுத்தும்படி கூறினேன். அந்த இடத்தில் பஸ்சை நிறுத்தக்கூடாது என்ற போதிலும் அவர்கள் தண்ணீரில் தத்தளிப்பதை கண்டு பஸ்சை அங்கு நிறுத்தி அவர்களை ஏற்றினேன். அப்போது 5 பேர் எங்கள் பஸ்சில் ஏறினர். அவர்கள் இருக்கையில் அமர்ந்த பின்பு தான் அடையாளம் காணமுடிந்தது.

அவர்கள் பா.ஜ.க.வின் மூத்த முக்கிய தலைவர்களான வாஜ்பாய், ஜனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிலர் என்பது தெரியவந்தது. உடனே நான் அவர்களை பார்த்து புன்முறுவலுடன் வணக்கம் தெரிவித்தேன். பதிலுக்கு அவரும் ‘‘ஐயாம் வாஜ்பாய்‘‘ என்று இருகரம் கூப்பி வணங்கி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். இதேபோல அருகில் இருந்த ஜனா கிருஷ்ணமூர்த்தியும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, தாங்கள் வந்த வாகனம் மழையின் காரணமாக பழுதாகி நின்று விட்டதாகவும், அந்த வழியாக வந்த பஸ்களை நிறுத்தும்படி கைகாட்டியும் யாரும் நிறுத்தவில்லை. நீங்கள் தான் நிறுத்தி உதவி செய்தீர்கள் என்று கூறினார். பின்னர் அவர்கள் 65 பைசா கட்டணம் செலுத்தி மதுரைக்கு பயணத்தை தொடர்ந்தனர்.

இதுபற்றி எப்படியோ தகவல் அறிந்த மதுரை போலீசார் கணேஷ் தியேட்டர் அருகே முன்கூட்டியே வந்து காத்திருந்து எங்களது பஸ்சை நிறுத்தினர். பின்னர் எங்களிடம் இந்த பஸ்சில் பா.ஜ.க. தலைவர்கள் பயணம் செய்வதாகவும், அவர்கள் செல்லும் ரெயில் மதுரை ரெயில் நிலையத்தில் காத்திருப்பதாகவும் கூறினர். எனவே இந்த பஸ்சை நேராக மதுரை ரெயில் நிலையத்துக்கு கொண்டு சென்று அவர்களை இறக்கிவிடும்படி கூறிவிட்டு எங்களது பஸ்சை அவர்கள் பின் தொடர்ந்து வந்தனர். பா.ஜ.க. தலைவர்கள் வந்துள்ளதை அறிந்த தொண்டர்கள் அவர்களுக்கு வரவேற்பு கொடுப்பதற்காக பஸ்சை வழிமறித்தனர். ஆனால் போலீசாரின் அறிவுரையின்படி பஸ்சை எங்கும் நிறுத்தாமல் நேராக ரெயில் நிலையத்துக்கு கொண்டு சென்றோம்.

வழக்கமாக மதுரையில் மாலை 6 மணிக்கு மேல் கூட்ட நெரிசல் காரணமாக தெற்கு வாசல் வழியாகத்தான் வாகனங்கள் செல்லும். ஆனால் எங்கள் பஸ்சில் முக்கிய தலைவர்கள் வந்ததால் எங்களை மட்டும் கீழவாசல் வழியாக செல்ல அனுமதித்தனர். இதனால் குறிப்பிட்ட நேரத்தில் நாங்கள் ரெயில் நிலையத்துக்கு சென்று அவர்களை பத்திரமாக இறக்கி விட்டோம். அப்போது மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவி எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. அதன் பின்னர் வாஜ்பாய் பிரதமரான பின்பு அவரை சந்திக்க ஆவல் ஏற்பட்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால் எதுவும் பலன் அளிக்கவில்லை. இது எனக்கு மனதளவில் கவலையாக இருந்தது.

இந்த நிலையில் தற்போது அவரது இறப்பு எனக்கு மிகுந்த வேதனைஅளிக்கிறது. அவரை அழைத்துச்சென்ற நினைவுகளை இப்போது நினைத்தாலும் மகிழ்ச்சிஅளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. பிலிப்பைன்சில் பலத்த மழை, நிலச்சரிவு 4 பேர் உயிரிழப்பு
பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘மங்குட்’ புயல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பலத்த பொருட்சேதத்தையும், உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்தியது.
2. மழைநீருடன் கழிவுநீர் கலந்து நிற்பதற்கு எதிர்ப்பு: பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
மழைநீருடன் கழிவுநீர் கலந்து நிற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மண்ணுக்குள் புதைந்து கிடந்த மழைநீர் வடிகால் தோண்டி சீரமைப்பு
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் 25 ஆண்டுகளாக மண்ணுக்குள் புதைந்து கிடந்த மழைநீர் வடிகால்களை இந்தொ–திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் தோண்டி சீரமைத்தனர்.
4. பான்பராக், குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்றால் நடவடிக்கை, போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
பான்பராக், குட்கா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு மாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5. மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்
மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.