வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் 2 ஆயிரத்து 800 எந்திரங்கள் - திண்டுக்கல்லுக்கு கொண்டு வரப்படுகிறது


வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் 2 ஆயிரத்து 800 எந்திரங்கள் - திண்டுக்கல்லுக்கு கொண்டு வரப்படுகிறது
x
தினத்தந்தி 19 Aug 2018 5:14 AM IST (Updated: 19 Aug 2018 5:14 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலின் போது திண்டுக்கல் மாவட்டத்தில் பயன்படுத்துவதற்காக வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் 2 ஆயிரத்து 800 எந்திரங்கள் கொண்டுவரப்பட உள்ளன.

திண்டுக்கல்,

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல் மட்டுமின்றி உள்ளாட்சி தேர்தல்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வாக்குப்பதிவுக்கு மின்னணு எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அனைத்து வாக் காளர்களும் ஓட்டுப்போட வேண்டும் என்பதற்காக, இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கிடையே மின்னணு எந்திரத்துக்கு பதிலாக பழையபடி வாக்குச்சீட்டுகளை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை சில கட்சியினர் வலியுறுத்துகின்றனர். இதையடுத்து வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் நவீன எந்திரம் வடிவமைக்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்காளர் கள் பொத்தானை அழுத்தியதும், நவீன எந்திரத்தில் அச்சாகும் ரசீதில் அவர் யாருக்கு வாக்களித்தார் என்பதை காண்பிக்கும்.

பின்னர் அந்த ரசீது தனியாக ஒரு பெட்டிக்குள் விழுந்து விடும். வாக்கு எண்ணிக்கையின் போது, அந்த ரசீதுகளும் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கடந்த சட்டசபை தேர்தலின் போது ஒருசில தொகுதிகளில் சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. அதேபோல் பிற மாநிலங்களிலும் சோதனை செய்யப்பட்டன. இதற்கு வாக்காளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரம் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக பெங்களூருவில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் அந்த எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்துக்கும் மாவட்ட வாரியாக எந்திரங் கள் வந்த வண்ணம் உள்ளன.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது மொத்தம் 2 ஆயிரத்து 39 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மேலும் 75 வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்கப்பட உள்ளன. எனினும், திண்டுக்கல் மாவட்டத்துக்கு மொத்தம் 2 ஆயிரத்து 800 எந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை அடுத்த வாரம் திண்டுக்கல்லுக்கு கொண்டு வரப்பட உள்ளன.



Next Story