மதுரை விமான நிலையத்தில் சுத்தியலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தல், வாலிபர் கைது
மதுரை விமான நிலையத்தில் சுத்தியலில் மறைத்து வைத்து தங்கம் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை,
சிங்கப்பூரில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க புலனாய்வுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்க புலனாய்வுத்துறை உதவி கமிஷனர் வெங்கடேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது நாகப்பட்டினத்தை சேர்ந்த கரிமுல்லாஷா (வயது 33) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனி அறையில் வைத்து சோதனை செய்தனர். பல முறை அவரையும், அவர் வைத்திருந்த பொருட்களையும் சோதனை செய்தபோது அதில் தங்கம் ஏதுவும் இருந்ததாக தெரியவில்லை. இருப்பினும் அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் நீங்காமல் இருந்ததை தொடர்ந்து மீண்டும் அவர் கொண்டு வந்த பொருட்களை சோதனை செய்தனர்.
சுமார் 1½ மணி நேர சோதனைக்கு பின்னர் அவர் வைத்திருந்த பையில் இரும்பு, பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட சுத்தியலில் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அது வழக்கத்திற்கு மாறாக எடை குறைவாக இருந்ததால் அதிகாரிகள் அதனை பிளேடு மூலம் அறுத்து பார்த்தனர். அப்போது அதில் ஒரு தங்க கட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் எடுத்து சோதனை செய்தபோது அது 145 கிராம் எடை கொண்டிருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து தங்கம் கடத்தி வந்த கரிமுல்லாஷாவை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.