ஓசூரில் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி உறவினர்களுடன் பெண் சாலை மறியல்


ஓசூரில் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி உறவினர்களுடன் பெண் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 Aug 2018 4:30 AM IST (Updated: 20 Aug 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி உறவினர்களுடன் பெண் சாலைமறியலில் ஈடுபட்டார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஓசூர்,

ஓசூரை அடுத்த முத்தாலியை சேர்ந்தவர் ஆனந்த். லாரி டிரைவர். இவரது மகள் தீபா (வயது 22). பி.காம் படித்து இவருக்கும், ஓசூர் அலசநத்தம் வெங்கடேஷ் நகரை சேர்ந்த சீனப்பா மகன் நவின்(33) என்பவருக்கும், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி திருமணம் நடந்தது.

கடந்த நவம்பர் மாதம் கர்ப்பிணியாக இருந்த தீபாவை, அவரது மாமனார், மாமியார், தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபாவிற்கு, ஏழு மாதத்தில் குழந்தை பிறந்தது. அதுவும் ஒரு மாதத்தில் இறந்து விட்டது. குழந்தை இறந்து பல மாதங்கள் கடந்த நிலையில், தீபாவை அவரது மாமனார், மாமியார் வந்து அழைத்து செல்லவில்லை.

பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் தன் கணவர் நவினை சந்திக்க சென்ற தீபா, அவரை சந்திக்க முடியாமல் திரும்பினார். இதையடுத்து ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தீபா புகார் செய்யவே, மனைவியுடன் சேர்ந்து வாழ்வதாக நவின் கூறினார்.

ஆனால் தீபாவை, அவரது மாமனார், மாமியார் வீட்டில் சேர்த்துக்கொள்ளவில்லை. இதையடுத்து நேற்று காலை உறவினர்கள் மற்றும் தன் தந்தை ஆனந்த், தாய் பாக்கியம்மா, சகோதரர் திவாகர் ஆகியோருடன் கணவர் வீட்டிற்கு சென்ற தீபாவை, அவரது மாமனார் சீனப்பா, மாமியார் விஜயலட்சுமி ஆகியோர், வீட்டிற்குள் அனுமதிக்காமல் கதவை பூட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் வீட்டின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட தீபா, அதன் பின் அலசநத்தம் சாலையில் உறவினர்களுடன் மறியல் போராட்டம் நடத்தினார். தகவலறிந்து வந்த அட்கோ போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார், தீபாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். இந்த சாலைமறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story