மழை, வெள்ளத்தால் பாதிப்பு: கேரள மாநிலத்துக்கு சிவசேனா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உதவி


மழை, வெள்ளத்தால் பாதிப்பு: கேரள மாநிலத்துக்கு சிவசேனா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உதவி
x
தினத்தந்தி 21 Aug 2018 5:31 AM IST (Updated: 21 Aug 2018 5:31 AM IST)
t-max-icont-min-icon

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு சிவசேனா கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்குகின்றனர்.

மும்பை,

கேரள மாநிலம் வரலாறு காணாத தொடர் மழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பலர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு தங்கள் உயிரை இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மராட்டிய அரசு ரூ.20 கோடி நிவாரணமாக அறிவித்தது. இதேபோல் மராட்டிய காங்கிரஸ் கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏ.க்களும் தங்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்குவதாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகேபாட்டீல் அறிவித்திருந்தார்.

இதேபோல் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற உதவியை கேரள மாநிலத்திற்கு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் சிவசேனா கட்சியின் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களும் தங்களின் ஒரு மாத சம்பளத்தை கேரள மாநிலத்தின் முதல்-மந்திரி பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்க முன் வந்துள்ளனர்.

இது குறித்து அக்கட்சியின் யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

இயற்கை பேரிடரில் சிக்கி தவிக்கும் கேரள மக்களுக்கு தோள்கொடுக்கும் வகையில், சிவசேனா கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை கேரள முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு வழங்குகின்றனர்.

கடந்த வாரம் தானேயை சேர்ந்த கட்சியினர் அத்தியாவசிய தேவையான உணவு மற்றும் உடைகளை தீவிரமாக சேகரித்து கேரள மக்களுக்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

Next Story