தூத்துக்குடியில் பதிவு செய்யாமல் கடலுக்கு செல்லும் விசைப்படகுகளை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நாட்டுப்படகு மீனவர் சங்கம் அறிவிப்பு
தூத்துக்குடியில் பதிவு செய்யாமல் கடலுக்கு செல்லும் விசைப்படகுகளை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் பதிவு செய்யாமல் கடலுக்கு செல்லும் விசைப்படகுகளை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு பைபர் மற்றும் கட்டுமர மீனவர் சமுதாய நலச்சங்க தலைவர் கயாஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நேற்று காலை தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
உண்ணாவிரதம்தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரம், கடல், நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மீனவ மக்கள் எதிர்ப்போம். தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் சிலர் பதிவு இன்றி, மீன்பிடி உரிமம் இன்றி சட்டவிரோதமாக கடலில் மீன்பிடித்து வருகின்றனர். இதனால் நாட்டுப்படகு மீனவர்களின் வலைகள் பல கோடி மதிப்பில் சேதம் அடைந்து உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் முழுமையாக நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்து உள்ளோம். ஒருவாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து உள்ளார். ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றால், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சட்டத்தை மதிக்காமல், படகுகளை பதிவு செய்யாமல் கடலுக்கு செல்லும் விசைப்படகுகளை எதிர்த்து மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்து உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம்.
வாழ்வாதாரம்திருச்செந்தூர் அருகே கல்லாமொழியில் உடன்குடி மின்திட்டத்துக்காக நிலக்கரி தளம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை மீனவ மக்கள் கடுமையாக எதிர்க்கிறோம். எனவே இது தொடர்பாகவும் போராட்டம் நடத்த உள்ளோம்.
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி பாரம்பரிய மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த சட்டத்தில் ஏதேனும் மாற்றம் செய்தால், பாரம்பரிய மீனவர்களின் கருத்தை கேட்டுதான் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது செயலாளர் ராஜ் உடன் இருந்தார்.