மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 80 ஆயிரம் கனஅடியாக குறைந்தது


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 80 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
x
தினத்தந்தி 21 Aug 2018 10:00 PM GMT (Updated: 21 Aug 2018 8:16 PM GMT)

ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

மேட்டூர், 


கர்நாடகா, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் மழை குறைந்ததால், அங்குள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.

இதன் எதிரொலியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. எனினும் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகளை மூழ்கடித்தப்படி தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது.

இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது. நீர்வரத்து குறைந்ததால் ஐந்தருவி பகுதிகளில் தண்ணீரில் மூழ்கி இருந்த பாறைகள் வெளியே தெரியதொடங்கின. எனினும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒகேனக்கல் மெயின் அருவி பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்புகள் வெள்ளப்பெருக்கின் போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. மேலும் தொங்கு பாலமும் சேதமடைந்தது.

இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் விதித்த தடை தொடர்ந்து நீடிக்கிறது. மேலும் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையும் தொடர்ந்து நீடிக்கிறது. போலீசார், தீயணைப்பு படையினர், மீட்பு குழுவினர் ஒகேனக்கல், ஊட்டமலை, நாகமரை, நாடார் கொட்டாய், பூச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதே அளவு தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் மேட்டூர் அணையில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 119.25 அடியாக இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் திறப்பது 65 ஆயிரத்து 800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. பின்னர் இரவு 10 மணிக்கு தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டு, வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதன்படி 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 54 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீரும், நீர்மின் நிலையம் வழியாக வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியும், பாசன கால்வாய் வழியாக வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு வழியாக ஆர்ப்பரித்து சென்ற தண்ணீரின் வேகம் சற்று குறைந்துள்ளது. உபரிநீர் வழிந்தோடி மேட்டூர் அனல்மின் நிலையம் அருகில் காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த பகுதியில் சீறிப்பாய்ந்த தண்ணீர் தற்போது எந்தவித சலனமும் இன்றி அமைதியாக செல்கிறது.

அணையில் இருந்து 1½ லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டதால், மேட்டூர்- எடப்பாடி சாலையை தண்ணீர் சூழ்ந்தது.

இதனால் அந்த சாலையில் கடந்த 15-ந் தேதி முதல் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டதால், சாலையில் ஓடிய தண்ணீர் வடிந்தது. இதனால் நேற்று மேட்டூர்-எடப்பாடி சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. காவிரி கரையோரம் இருந்த தென்னந்தோப்பு, வாழைத்தோட்டங்கள் உள்பட விவசாய நிலங்களுக்குள் புகுந்த காவிரி வெள்ளம் வடிந்துள்ளது. மேலும் நேற்று மேட்டூருக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.
தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் காவிரி கரையோரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் தங்களது வழக்கமான பணிக்கு திரும்பி உள்ளனர். 

Next Story