பள்ளிக்கு மது போதையில் வந்த தலைமை ஆசிரியர் - நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் தகவல்


பள்ளிக்கு மது போதையில் வந்த தலைமை ஆசிரியர் - நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் தகவல்
x
தினத்தந்தி 22 Aug 2018 3:45 AM IST (Updated: 22 Aug 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

‘திருவண்ணாமலை அருகே பள்ளிக்கு மதுபோதையில் வந்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையை அடுத்த கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட செல்லங்குப்பம் ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்ப பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வந்த பிறகு மது அருந்திவிட்டு போதையில் பள்ளி வளாகத்திலேயே படுத்து தூங்குவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் மது போதையில் பள்ளிக்கு வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஊர் பொதுமக்கள் கல்வி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில் வட்டார கல்வி அலுவலர் ஸ்ரீராமலு செல்லங்குப்பம் பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், பள்ளி தலைமை ஆசிரியர் மதுபோதையில் பள்ளிக்கு வருவது உறுதியானது. இதையடுத்து வட்டார கல்வி அலுவலர் விசாரணை அறிக்கையை நேற்று முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் வழங்கினார்.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில், ‘வட்டார கல்வி அலுவலர் அறிக்கையின்படி செல்லங்குப்பம் பள்ளி தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Next Story