விடுமுறை தினத்தில் சம்பளத்துடன் ஓய்வு கேட்டு தேசிய தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்


விடுமுறை தினத்தில் சம்பளத்துடன் ஓய்வு கேட்டு தேசிய தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 21 Aug 2018 11:00 PM GMT (Updated: 21 Aug 2018 8:52 PM GMT)

விடுமுறை தினத்தில் சம்பளத்துடன் ஓய்வு கேட்டு தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

திருச்சி,

பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களில் நிரந்தர பணிகளை செய்து முடிக்க 10 முதல் 20 ஆண்டுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள் எனவும், அவர்களுக்கென தொழிற்சங்க உரிமைகளும், நியாயமான ஊதியமும் தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மேளம் முன்வைத்து நேற்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

திருச்சியில் டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு மாநில தலைவர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மில்டன் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் முத்து முன்னிலை வகித்தார். உண்ணாவிரத போராட்டத்தை ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் மணி தொடங்கி வைத்தார்.

உண்ணாவிரத போராட்டத்தில் மாநில செயலாளர் ஆனந்தன், பொருளாளர் சம்பத், பொதுச்செயலாளர் மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.

இதில் மாதந்தோறும் 7–ந் தேதி சம்பளம் வழங்கப்பட வேண்டும். மத்திய அரசு அறிவித்த குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும். தேசிய மற்றும் மாநில விடுமுறை நாட்களில் சம்பளத்துடன் கூடிய ஓய்வு கொடுக்க வேண்டும். ஆண்டுதோறும் போனஸ் வழங்கப்பட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும், சிக்கனம் என்ற பெயரில் பணிநீக்கம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.


Next Story