குன்னூரில் இருந்து ஊட்டி வரை நீராவி என்ஜின் மூலம் மலை ரெயிலை இயக்க நடவடிக்கை


குன்னூரில் இருந்து ஊட்டி வரை நீராவி என்ஜின் மூலம் மலை ரெயிலை இயக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 22 Aug 2018 10:30 PM GMT (Updated: 22 Aug 2018 7:52 PM GMT)

குன்னூரில் இருந்து ஊட்டி வரை நீராவி என்ஜின் மூலம் மலை ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுபாராவ் கூறினார்.

குன்னூர்,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரெயிலில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பயணம் செய்து இயற்கை எழில் காட்சிகளை ரசித்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுபாராவ் மற்றும் அதிகாரிகள் குன்னூர் ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பணிமனை மற்றும் பழமையான என்ஜின் உள்ள பகுதிகளையும் பார்வையிட்டனர். ரெயில் நிலையத்தின் விரிவாக்கம் மற்றும் அங்கு நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுபாராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஊட்டியில் இருந்து கேத்தி வரை விடுமுறை நாட்களில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட்டது. அந்த முயற்சி வெற்றியும் பெற்றது. எனவே தொடர் விடுமுறை வரும் நாட்களில் அந்த சிறப்பு மலைரெயில் மீண்டும் இயக்கப்படும். தற்போது நூற்றாண்டு பழமை வாய்ந்த நீராவி என்ஜின் மூலம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லாறு வரை மட்டுமே மலைரெயில் இயக்கப்படுகிறது. குன்னூரில் இருந்து ஊட்டி வரை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். குன்னூர் ரெயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் செல்பி படம் எடுக்க இடவசதி(செல்பி ஸ்பாட்) ஏற்படுத்தப்படும். அந்த இடத்தில் பழமை வாய்ந்த நீராவி என்ஜின் பணிமனை மற்றும் பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ரன்னிமேடு ரெயில் நிலையத்தை புதுப்பித்து நவீன இருக்கை வசதிகள் செய்யப்படும். மேலும் ‘செல்பி ஸ்பாட்‘ அமைக்கப்படும். அக்டோபர் மாதம் முதல் மலைரெயில் கட்டணம் உயர்த்தப்படுவது சுற்றுலா பயணிகளை பெரிதும் பாதிக்காது. குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பயணிகள் குன்னூரிலேயே பயணச்சீட்டு வாங்கி செல்லும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story