பெங்களூருவில் செப்டம்பர் மாதம் கனமழை பெய்ய வாய்ப்பு


பெங்களூருவில் செப்டம்பர் மாதம் கனமழை பெய்ய வாய்ப்பு
x
தினத்தந்தி 24 Aug 2018 5:37 AM IST (Updated: 24 Aug 2018 5:37 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் அடுத்த மாதம் (செப்டம்பர்) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், எனவே அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படியும் கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம், மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குடகு மற்றும் கேரள மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது. குடகு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழைக்கு இதுவரை 16 பேர் உயிர் இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உடைமைகளை இழந்த முகாம்களில் தங்கி உள்ளனர். இதுபோல, கேரளாவில் பெய்த பேய் மழைக்கு 231 பேர் பலியாகி இருக்கிறார்கள். காணால் போன 32 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. மேலும் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

குடகு மற்றும் கேரள மாநிலம் மழையால் தத்தளிப்பதற்கு, அங்கு மழை காலம் தொடங்கும் முன்பே முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததே காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், பெங்களூருவில் அடுத்த மாதம் (செப்டம்பர்) கனமழை கொட்டி தீர்க்க வாய்ப்புள்ளதாகவும், அதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படியும் கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் கர்நாடக அரசுக்கும், பெங்களூரு மாநகராட்சிக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெங்களூருவில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 383.3 மில்லி மீட்டர் அளவுக்கும், அக்டோபர் மாதம் 226.9 மில்லி மீட்டர் அளவுக்கும் மழை பெய்திருந்தது. அதாவது வழக்கத்தை விட கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 120 சதவீதமும், அக்டோபர் மாதம் 42 சதவீதமும் கூடுதலாக மழை பெய்திருந்தது. இதனால் பெங்களூருவில் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது. பெங்களூருவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மழையால் பாதிப்பு ஏற்படுவதற்கு ஏரி நிலங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் சாக்கடை கால்வாய்களை சரியாக தூர்வாராததே காரணம் என்று தெரியவந்தது.

தற்போது நடப்பு ஆண்டில் செப்டம்பர் மாதம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பெங்களூரு மாநகராட்சி மற்றும் கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் தற்போதுள்ள சூழ்நிலையில் ஒரு நாளுக்கு 80 மில்லி மீட்டர் மழை பெய்தால் தண்ணீர் தேங்காமல் சென்று விட வாய்ப்பிருக்கிறது. ஆனால் கனமழை கொட்டி தீர்த்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுபற்றி கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையத்தின் இயக்குனர் சீனிவாச ரெட்டி கூறும் போது, “பெங்களூருவில் கடந்த ஜூன் முதல் ஆகஸ்டு மாதம் வரை வழக்கத்தை விட கடந்த ஆண்டை விட 30 சதவீதம் குறைவாக தான் மழை பெய்திருக்கிறது. இதே நிலைமை தான் கடந்த ஆண்டும்(2017) ஜூன் முதல் ஆகஸ்டு மாதம் வரை மழை குறைந்த அளவே பெய்திருந்தது. ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்கத்தை விட 120 சதவீதம் மழை அதிகமாக பெய்திருந்தது. அதுபோல, அடுத்த மாதமும் பெங்களூருவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது,“ என்றார்.

இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சியின் என்ஜினீயரான பெட்டே கவுடா கூறுகையில், “பெங்களூரு நகரில் 633 கழிவுநீர் சாக்கடை கால்வாய் ஓடுகிறது. சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணிகளும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் இப்போதே தொடங்கி விட்டது. கே.ஆர்.புரம், யஷ்வந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன் எச்சரிக்கையாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன,“ என்றார். 

Next Story