ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அனைத்து கட்சியினர் சாலை மறியல்


ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அனைத்து கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 25 Aug 2018 3:00 AM IST (Updated: 24 Aug 2018 10:27 PM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி கோவில் திருக்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அனைத்து கட்சியினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

திட்டக்குடி,

திட்டக்குடியில் வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு எதிரே உள்ள திருக்குளத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் இந்து சமய அறநிலையத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் திருக்குளத்தின் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில், திருக்குளத்தின் வடக்கு கரை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறி நேற்று பா.ம.க., தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சியினரும்திட்டக்குடி பஸ்நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர், சப்–இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அனைவரும் மறியலை கைவிட்டனர்.

இதைத்தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் இது தொடர்பான சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் மாலையில் நடைபெற்றது. தாசில்தார் சத்தியம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் துணை தாசில்தார்கள் ராமர், ஜெயச்சந்திரன், நெடுஞ்சாலைதுறை பொறியாளர் அருண்குமார், கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் பா.ம.க. நகர தலைவர் ராஜராஜன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட துணை செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர் சுரேந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் கவுதமன், பா.ஜனதா கட்சி நிர்வாகி பூமிநாதன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் முருகையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திருக்குளத்தின் வடக்கு பகுதியில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீசு அனுப்பி, உரிய கால அவகாசம் முடிந்த உடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

--–

படம் உண்டு மெயிலில் உள்ளது


Next Story