கோவையில் ரெயில் என்ஜின் மீது ஏறிய வாலிபரை மின்சாரம் தாக்கியது, உடல் கருகியதால் தீவிர சிகிச்சை
கோவை ரெயில் நிலையத்தில் ரெயில் என்ஜின் மீது ஏறிய வடமாநில வாலிபரை மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகியதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை,
கோவை ரெயில் நிலையத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்தார். 6–வது பிளாட்பாரத்துக்கு சென்ற அவர் திடீரென்று அங்கு நின்று கொண்டு இருந்த ரெயில் என்ஜின் மீது ஏறினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள், அவரை கீழே இறங்குமாறு கூறி சத்தம் போட்டனர்.
ஆனால் அவர் எதையும் காதில் வாங்கி கொள்ளாமல் என்ஜின் மீது ஏறி மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியை தொட்டார். உடனே மின்சாரம் தாக்கியதால் அவர் தூக்கி வீசப்பட்டார். மின்சாரம் தாக்கியதில் அவருடைய உடல் கருகியது.
ஆனாலும் எழுந்து சிறிது தூரம் நடந்த அந்த வாலிபர் பின்னர் மயங்கி விழுந்தார். இது குறித்த தகவலின் பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு, 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த அந்த வாலிபரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சை பெற்று வரும் வாலிபரிடம் ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் ஜோகன் (வயது 30) என்பதும், வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர் சரியாக பேச முடியாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று போலீசாரால் அறியமுடிய வில்லை.
மனநலம் பாதிக்கப்பட்டதால் அவர் உயர் அழுத்த மின்கம்பியை பிடித்து இழுத்தாரா? அல்லது தற்கொலை செய்யும் நோக்கத்தில் இவ்வாறு செய்தாரா? என்று தெரியவில்லை. இது குறித்து கோவை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.